
'சிவபூஜையில் கரடி' என்ற பழமொழியை, வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையற்ற நேரத்தில், ஒரு நபர் வந்து விட்டால், அவர்களைக் குறிக்கவே இந்தப் பழமொழி.
பழமொழிகள் பழமையானவை. அவை கால மாறுபாட்டால், அடுத்தடுத்த தலைமுறைகள் பயன்படுத்தும்போது, சில மாறியதும் உண்டு. அப்படி மாறிய பழமொழிகளில் இதுவும் ஒன்று.
'சிவபூஜையில் கரடிகை' என்பதே சரியான தொடர். கடைசியில் வரும் 'கை'யை, காலப்போக்கில் விட்டுவிட்டோம். பழங்காலத்தில், தெய்வ வழிபாட்டின்போது, பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று கரடிகை. கரடி கத்துவது போல் ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதால் இந்தப் பெயர். மிருதங்கத்தைப் போலவே மரம், தோலால் செய்யப்பட்ட கருவி இது. தாளவிசைக் கருவியாகப் பயன்பட்டது.
கம்பராமாயணத்தில் வரும் பாடல் ஒன்றின் (8445) வழியாக 'கரடிகை' என்ற இசைக்கருவி இருந்ததை அறியமுடிகிறது.
'கும்பிகை திமிலைசெண்டை
குறடுமாம் பேரிகொட்டி
பம்பை தார்முரசும் சங்கம்
பாண்டில் போர்ப்பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை
கரடிகை துடிவேய் கண்டை
அம்பலி கனுவை ஊமை
சகடையோ டார்த்தவன்றே'
என்ற பாடலில் வரும் சொற்கள் அனைத்துமே, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளைக் குறிக்கிறது. அவற்றில் ஒன்று கரடிகை.
சிவாலயங்களில் வழிபாட்டிற்காக இசைக்கப்படும் கருவிகளில் ஒன்று கரடிகை. பெருமாள் கோயில்களில் வீணை, யாழ், குழல் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
'அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலில், தாளவிசைக் கருவிகள் எவை என்பதைக் குறிப்பிடுகிறார். அதில்,
'இடக்கை சல்லிகை கரடிகை பேரிகை
இசைக்கும் குடமுழவு...'
என்று நீண்டு செல்கிறது அப்பாடல்.
ஆக, சிவ பூஜையின்போது முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக் கருவிதான் கரடிகை. இது ஏன் இப்போது தேவையற்ற இடத்தில் ஒருவர் வருகையின்போது பயன்படுத்தப்படுகிறது?
நாற்றம் என்ற சொல் நல்ல நறுமணத்தைக் குறிப்பதற்காக முன்னர் பயன்பட்டது. இப்போது துர்நாற்றத்தைக் குறிக்கும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, இந்தக் கரடிகை என்ற பழமொழியும் சுருங்கி, கரடியாகி விட்டது.