PUBLISHED ON : ஆக 20, 2018

மேடைப் பேச்சு என்பது தனிக் கலை. சிலர் பேசுவதை நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்கத் தோன்றும். சொல்ல வந்ததைத் தெளிவாகவும், கேட்பவர்களுக்குப் பிடிக்கும்படியும் பேச வேண்டும். பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் எல்லோரும் கலந்துகொள்வதில்லை. சிலருக்கு மட்டுமே அதில் ஆர்வம் இருக்கிறது. பேச்சுப் போட்டிகளால் என்ன பலன் கிடைக்கிறது என்று திருவள்ளூர், மணவாள நகர், ஜேக்கப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்கள் கருத்தைக் காண்போம்.
ஜீ.கோ.மோனிகா, 10ஆம் வகுப்பு
என்னோட தமிழாசிரியர் வகுப்புல பேசறதைப் பார்த்துத்தான் எனக்குப் பேச்சுப் போட்டி மீது ஆர்வம் வந்தது. சின்ன வயசில இருந்தே பேச்சுப் போட்டிகளில கலந்துக்கறேன். பேசும்போது, நான் பேசறது கேக்கறவங்களுக்கு ரீச் ஆகணும்னு நினைப்பேன். பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கறப்ப எல்லோரும் பாராட்டுவாங்க. அது சந்தோஷமா இருக்கும்.
ச.விஜய்கிருஷ்ணா, 9ஆம் வகுப்பு
நிறைய பேச்சுப் போட்டிகளில கலந்துக்கிட்டதால, என்னால எந்தக் குறிப்பும் எடுத்து வெச்சுக்காம பேச முடியுது. நிறைய செய்யுட்கள், மேற்கோள்கள் எல்லாம் மனப்பாடமா தெரியும். பேசறது தன்னம்பிக்கை தர்ற விஷயம். நம்மோட லீடர்ஷிப் தகுதியை வளர்த்துக்க உதவுது.
நா.ஹரிணி, 10ஆம் வகுப்பு
மத்தவங்கள்ல இருந்து நான் தனிச்சுத் தெரியணும். இது எனக்கு மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர், உறவினர்ன்னு எல்லோருக்கும் பெருமையைத் தேடித் தருது. பேச்சுப் போட்டிக்காக மட்டும் படிக்காம, எப்பவும் நிறைய புக்ஸ் படிப்பேன். எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் உடனே என்னால பேச முடியும். இதனால என்னோட பொதுஅறிவை வளர்த்துக்க முடியுது.
கோ.ஸ்வேதா, 10ஆம் வகுப்பு
பேச்சுப் போட்டியால நமக்குள்ள பல திறமைகளை வளர்த்துக்க முடியும். முக்கியமா வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட தலைப்புல பேசணும்னா, அதுக்காக நிறையப் புத்தகங்களைப் படிச்சு, குறிப்புகள் எடுத்துக்குவேன். தலைவர்களோட மேற்கோள்களை மனப்பாடம் செஞ்சுக்குவேன். இதெல்லாம் என்னையறியாமலேயே நான் கத்துக்கிட்டவை; பலன் அளிப்பவை.
மே.தருண்சிவா, 10ஆம் வகுப்பு
பேச்சுப் போட்டியில கலந்துகொண்டு பல பரிசுகளை வாங்கியிருக்கேன். இதனால ஸ்கூல் முழுக்க எல்லோருக்கும் என்னைத் தெரியும். இது என் பேச்சுத் திறமையை மேலும் வளர்த்துக்க உற்சாகப்படுத்துது. குறிப்பா சொல்லணும்னா, பேச்சுப் போட்டியால மனப்பாடத் திறன் அதிகரிக்குது. பாடங்களிலேயும் நிறைய மதிப்பெண் வாங்க முடியுது.
பி.ஜெய்கிருஷ்ணா மிஸ்ரா, 10ஆம் வகுப்பு
எனக்கு சின்ன வயசுல நிறைய பேர் முன்னாடி பேசறதுன்னா பயம். ஆனா இப்ப அப்படியல்ல. நான் பேசற கருத்தை தெளிவா சொல்ற அளவுக்கு நான் வளர்ந்திருக்கேன். இதுக்குக் காரணம் பேச்சுப் போட்டிதான். எந்த இடத்திலயும் என்னோட கருத்தை அழுத்தமா சொல்ற அளவுக்கு நான் இருக்க, பேச்சுப் போட்டியில கலந்துக்கறதுதான் காரணம்.
