தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தொழிலாளர்களின் தோழர்

தொழிலாளர்களின் தோழர்

தொழிலாளர்களின் தோழர்


PUBLISHED ON : ஆக 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ஜீவானந்தம்

21.8.1907 -- 18.1.1963

பூதப்பாண்டி, நாகர்கோவில்.


சென்னையில் அவர் வசித்து வந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அப்போதைய முதல்வர் காமராஜர் வந்திருந்தார். அருகே தான் அவரது வீடு இருக்கிறது என்று ஒரு குடிசைப்பகுதிக்கு உதவியாளர் அழைத்து வர காமராஜர் அதிர்ந்தார். மிகப்பெரிய மனிதர் சாதாரணமாக வாழக்கூடாது என்று, அலுவலகம் திரும்பியதும் விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை அவருக்கு ஒதுக்கும்படி உத்தரவிட்டார். அப்போது, 'எல்லோருக்கும் வீடு கொடுத்துவிட்டு எனக்கும் கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்' என்று அதை ஏற்க மறுத்த அந்த நேர்மையாளர்தான் ஜீவா.

சிறு வயதிலேயே காந்தியின் கொள்கைகளில் அவருக்கு ஈர்ப்பு அதிகம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே காந்தி பற்றிய கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். இராமநாதபுரத்தில் அவர் நிறுவிய காந்தி ஆசிரமத்துக்கு வந்த காந்தி, 'நீங்கள் இந்தத் தேசத்தின் சொத்து' என்று பெருமையுடன் சொன்னார்.

காங்கிரஸ் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ராமசாமியின் நட்புக் கிடைக்க, அவரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுப் போராடினார். ஜீவாவின் மேடைப் பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. இந்திய விடுதலை உணர்வைப் பேச்சு மூலமாக மக்களிடையே விதைத்தார். பேச்சுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தபோதும், அதையும் மீறிப் பேசி சிறை சென்றார்.

பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக ஜீவாவை சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. சிறையில் கம்யூனிசம் பற்றிய நூல்களைத் தொடர்ந்து படித்து தீவிர பொதுவுடைமையாளராக மாறி வெளிவந்தார். சோஷலிச சரித்திரம், சோஷலிச தத்துவம் ஆகிய நூல்களை எழுதிய ஜீவா, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, 1952இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, தொழிலாளர்களின் பிரச்னைகளை உரக்கப் பேசினார். வ.உ.சி., ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கிப் பழகினாலும், வாழ்நாள் முழுக்க எளிமையாகவே வாழ்ந்தார்.

இலக்கியம், இயக்கம், போராட்டம் என்று நேர்மையான அரசியல் தலைவராக கடைசிவரை வாழ்ந்த ஜீவா, மக்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us