PUBLISHED ON : ஜன 22, 2018

மூஸ் (Moose)
உயிரியல் பெயர்: 'அல்செஸ் அல்செஸ்' (Alces Alces)
உயரம்: 8 அடி
எடை: 750 கிலோ
வேகம்: மணிக்கு 32 கி.மீ.
ஆயுட்காலம்: 16 ஆண்டுகள்
மான் இனங்களிலேயே மிகப் பெரியது 'மூஸ்' (Moose). 'எல்க்' (Elk) என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது. மற்ற வகை மான்களைப் போல இவை கூட்டமாக வாழ்வது இல்லை. தனியாகவே வாழ்கின்றன.
உடல் சாம்பல், பழுப்பு நிறங்களில் இருக்கும். பாலூட்டி உயிரினமான இது வேகமாக நடக்கும். நன்றாக நீந்தவும் செய்யும். எதிரிகளைக் கண்டால் மூர்க்கத்தனத்துடனும் தாக்கும். கரடி, நரி போன்ற விலங்குகள் இவற்றின் எதிரிகள். வெயில் காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகே வசிக்கும். கழுத்தடியில் மண் போன்ற ஒரு தோல் மடிப்பு தொங்கும்.
ஆண் மான்களுக்கு மரக்கிளை போல விரிந்த கொம்புகள் இருக்கும். சில மான்களுக்கு 6 அடி நீளக்கொம்புகளும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் கொம்புகள் உதிர்ந்து ஆறு மாதத்தில் மீண்டும் முளைத்துவிடும். தழைகளே இவற்றின் முக்கிய உணவு. பாசிகளையும் நீர்ச்செடிகளையும் உண்ணும்.
பின் கால்களால் நின்று கொண்டு 12 - 15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும். ஒரு வயது வரை குட்டி தாயுடனேயே இருக்கும். உடலில் அடர்த்தியான ரோமம் இருப்பதால், அதிகக் குளிரைத் தாங்கும் திறன் உண்டு. கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஆர்க்டிக் துந்த்ரா வனப்பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
- அ.ஆனந்தி
