தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உள்ளான் ஐயா!

உள்ளான் ஐயா!

உள்ளான் ஐயா!


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெடுங்கால் உள்ளான்

ஆங்கிலப் பெயர்: 'பிளாக் விங்டு ஸ்டில்ட்' (Black -winged Stilt)

உயிரியல் பெயர்:'ஹிமன்டோபஸ் ஹிமன்டோபஸ்' (Himantopus Himantopus)

நீர்நிலைகளை ஒட்டிய கரைப்பகுதிகளில் வாழும் பறவை நெடுங்கால் உள்ளான். வயல்வெளி, கடற்கரைப் பகுதி, உப்பளப் பகுதி, நன்னீர் சதுப்பு நிலப்பகுதிகளிலும் இவற்றைக் காணலாம். 'ரிகர்விரோஸ்ட்ரிடே' (Recurvrostridae) பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிவந்த நிறத்தில் மெல்லிய நீண்ட கால்களும், கருப்பு நிறத்தில் நீண்டு வளைந்த அலகும் உடையவை. வெள்ளை நெஞ்சுப் பகுதி, கருமையான சிறகுகள் கொண்டது.

உடலின் மொத்த உயரத்தில் 60 சதவீத நீளம் உள்ள கால்கள் இதைத் தனித்துக் காட்டும். இதன் நீண்ட கால்கள், தண்ணீரில் நடந்து சென்று இரை தேட உதவுகின்றன. நீரில் உள்ள பூச்சி, புழு, சிறிய மீன், மீன் முட்டை, நீர்த்தாவரங்களின் விதை, தவளைக் குஞ்சு, நத்தை போன்றவற்றை உண்கின்றன. கூட்டமாகக் கூடி வாழும். இனபெருக்க காலத்தில் ஆண் பறவை அதிக அளவில் கூடு கட்டும். மணல் திட்டுகளில் குழியை அமைத்து தாவரங்களால் கூடு கட்டுகிறது. கூடுகளை ஒரே பகுதியில் கூட்டமாகக் கட்டுவது இதன் வழக்கம். இந்தப் பறவையின் கூட்டை வேறு பறவையோ, எதிரிகளோ வந்து முற்றுகையிட்டால், கூட்டமாகப் பறந்து அதிக ஒலி எழுப்பி, நீண்ட நேரம் தாக்கும் பழக்கம் கொண்டது.

கோடைகாலங்களில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள மண் திட்டுகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். நான்கு முட்டைகள் வரை இடும். ஆணும், பெண்ணும் முட்டைகளையும், குஞ்சுகளையும் பராமரிக்கின்றன. கட்டு விரியன் உள்ளான், பொய்க்கால் உள்ளான், கருப்பு உள்ளான், ஹவாய் உள்ளான், கருப்பு கழுத்து உள்ளான், வெள்ளைத் தலை உள்ளான், நெடுங்கால் உள்ளான் என இவற்றில் பல வகைகள் உள்ளன. வெப்பம், காலநிலை மாற்றம், பருவமழை பொய்த்துப் போதல், வறட்சி, நன்னீர்ப் பகுதிகள் பாதிக்கப்படுதல், நன்னீர் பகுதிகளைஆக்ரமித்தல் ஆகிய காரணங்களாலும், ஆந்தை, காகம், பருந்து, உடும்பு, பாம்பு, மர நாய், காட்டுப் பூனை ஆகியவற்றால் வேட்டையாடப்படுவதாலும், இப்பறவை இனம் அருகி வருகிறது.

உயரம்: 40 செ.மீ.

எடை: 200 கிராம்

ஆயுட்காலம்: 12 ஆண்டுகள்



- ப.கோபாலகிருஷ்ணன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us