தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மகிழ்ச்சியோடு கல்வி!

மகிழ்ச்சியோடு கல்வி!

மகிழ்ச்சியோடு கல்வி!


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கதிர் ஆரம்பித்தான். “கையெல்லாம் ஒரே வலி மிஸ். ஹோம் ஒர்க் எழுதி, எழுதி, கையே ஓஞ்சுப் போச்சு.”

உமா மிஸ் ஆதரவோடு பார்த்தார். வீட்டுப் பாடத்தை எழுதி முடிப்பதற்குள் கதிர் சோர்ந்துவிடுவதை அவன் அவ்வப்போது சொல்வான். இன்று இன்னும் அதிகம் போலும். சாலை ஓரமாக நடந்துகொண்டிருந்தவர்கள், ஒரு திருப்பத்தில், சாலையைக் கடந்து எதிர்ப்புறம் போனார்கள்.

“ஹோம் ஒர்க்கே கொடுக்காத நாடு ஏதாவது இருக்கா மிஸ்?” என்று ஓவியா ஆரம்பித்தாள்.

“கொஞ்சமா கொடுக்கற நாடு இருக்கு. பின்லாந்து. உலகத்துலேயே சிறந்த கல்விமுறை இருக்கிற நாடு அதுதான்” என்றார் உமா. கதிர் கொஞ்சம் உலக வரைபடத்தை யோசித்துப் பார்க்க ஆரம்பித்தான். ஐரோப்பாவில் உள்ள சின்ன நாடு. பெரிய சைஸ் பப்பாளி மாதிரி இருக்கும் அதன் வடிவம்.

பின்லாந்து என்றவுடன் ஞாபகம் வந்தது 'நோக்கியா' தான். வீட்டில் இன்னும் இரண்டு, மூன்று பழைய நோக்கியா போன்கள் கிடக்கின்றன. சார்ஜ் போட்டால், நான்கு நாளைக்குக் கூட வரும் என்று சொல்வார் அப்பா.

“ரொம்ப சின்ன நாடு தானே மிஸ்.”

“ஆமாம். சென்னையைவிட குறைஞ்ச மக்கள்தொகை. அங்கேதான் மிகச்சிறந்த கல்விமுறை இருக்கு.” என்று தொடங்கினார் உமா மிஸ். “அரசியல் தலைவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடுக்குப் பயணம் போனா, அது பெரிய செய்தியா வரும். ஆனால், ஒரு கல்வியாளர் அப்படி செய்தியாகி பார்த்திருக்கீங்களா?”

இல்லை என்பது போல் ஓவியா தலையாட்ட, 'பாஸி ஷால்பெர்க்' பற்றியும் பின்லாந்து பற்றியும் சொல்லத் தொடங்கினார். பாஸி பின்லாந்தின் கல்வித்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்தவர். அங்கே நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களுக்குக் காரணமானவர். அவர் தற்போது, ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு வந்துவிட்டார் என்பது உலக அளவில் செய்தியானது.

பின்லாந்து கல்விமுறையை உலகம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், அது வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான். எல்லா நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று வாட்டிக்கொண்டிருக்கும் போது, பின்லாந்து மாற்றி யோசித்தது.

அங்கே எல்லாமே அரசாங்கப் பள்ளிகள் தான். ஏழு வயதில்தான் மாணவர்கள் பள்ளியிலேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதுவரை, எல்லாமே விளையாட்டுதான்.

“ஏழு வயசு வரைக்கும் ஸ்கூலுக்கே போகவேண்டாமா?” கதிர் ஆச்சரியத்தில் திரும்பியபோது, உமா மிஸ் சிரித்தார்.

“ஆமா. அதுக்கப்புறமும் அங்கே ஸ்கூலே வேற மாதிரி இருக்கும்.”

“வேற மாதிரின்னா?”

பள்ளிகள் என்பவை நான்கு சுவருக்குள் அடைபட்ட இடமல்ல. இந்தப் பாடத்திட்டம், அந்தப் பாடத்திட்டம் என்ற வரையறை இல்லை. அவர்களுடைய வயதுக்கு ஏற்ப என்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அவற்றை, அவர்களாகவே கற்றுக்கொள்ள வைப்பதுதான் பின்லாந்து ஆசிரியர்களுடைய வேலை.

வழக்கமான மேஜை நாற்காலிகளில் உட்கார்ந்துதான் படிக்கவேண்டும் என்பது இல்லை, எது வசதிப்படுமோ, அங்கே உட்காந்துகொண்டு வாசிக்கலாம், கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுடைய முன்னேற்றத்துக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு. ஒவ்வொரு குழந்தையின் தேவையைப் பொறுத்து, அவர்களுடைய ஆர்வத்தைப் பொறுத்து கற்றுக்கொடுக்கப்படும். அதாவது, மாணவர்களே கற்றுக்கொள்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படும்.

“அதாவது நீங்க செய்யறா மாதிரியா மிஸ்?” ஓவியா கேட்டபோது, உமா மிஸ்ஸுக்குப் பெருமையாக இருந்தது.

“ஸ்பெஷல் சில்ரன்களுக்குத் தனியா பள்ளிக்கூடம் கிடையாது. எல்லோரும் ஒரே பள்ளியில்தான் சேர்த்துக்கொள்ளப்படுவாங்க. பணக்காரர்கள், ஏழைகள் வித்தியாசமில்லை. எல்லோரும் ஒரே பள்ளியில் தான் படிக்கவேண்டும். மாணவர்கள் என்ன கத்துக்கணுமோ, அதைத் தெரிஞ்சுகொள்வதற்கு ஏற்ப, குழு, குழுவா பிரிப்பாங்க. அவங்க குழுக்குள்ளேயே படிச்சு, பேசி, விவாதிச்சு, மேலும் மேலும் தெரிஞ்சுக்குவாங்க.”

“ஓ! அப்போ கிளாஸ்ல பேசலாமா?” என்று இடைமறித்தான் கதிர்.

“பேசறதும் பழகறது தான் முக்கியம். வெளியே மழை பெஞ்சா, ஓடிப் போய் நனையக் கூட நனையலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஒரே வகுப்பறையில தான் இருக்கணும்ங்கறதும் அவசியமில்ல.”

அதைவிட, உமா மிஸ் சொன்ன இன்னொரு விஷயம் தான் ஆச்சரியம் தந்தது. ஒவ்வொரு பீரியட் முடிஞ்சதும் பிள்ளைகளை விளையாட அனுப்பணும்னு அந்த நாட்டுல சட்டமே இருக்காம். 45 நிமிஷ பீரியடுக்கு,15 நிமிஷ விளையாட்டு. எல்லா நேரமும் வகுப்பறையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டாம். விளையாடணும். விளையாட்டுதான் கல்வி கற்க சரியான வழி.

அதேபோல, வெளியே முதியோர் இல்லங்களுக்குப் போய் பாட்டுப் பாடறது, பெரியவங்களுக்குப் புத்தகங்கள் படிச்சு காண்பிக்கறது எல்லாமே அங்கே முக்கியம். சமூகத்தோட, இயற்கையோட இணைந்து என்னவிதமான கல்வியைக் கத்துக்க முடியுமோ அதுதான் உண்மையான கல்வின்னு அங்கே புரிஞ்சுக்கிட்டிருக்காங்க.

டீச்சர்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். சொல்லப் போனா, டாக்டர், இன்ஜினியர்களுக்கு இணையான சம்பளமும் மரியாதையும் அங்கே ஆசிரியர்களுக்கு உண்டு. அவர்களுக்கு உள்ள சுதந்திரம்தான் மிக முக்கியம். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னோட வகுப்புல என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கணும், எப்படிச் சொல்லிக் கொடுக்கணும்ங்கறதை முடிவு செய்யலாம். மொத்தமான பாடத்திட்டம் என்று ஒன்று உண்டு. ஆனால், அதை வகுப்பறையில் மாற்றியமைச்சு, மேம்படுத்துவதற்கு நிறைய இடம் இருக்கு.

“ஒரே ஒரு விஷயம் தான் பின்லாந்துல முக்கியம். புதுசா முயற்சி செஞ்சுபார்க்க தயங்கவே மாட்டாங்க. கல்வி தொடர்பாக நடத்தப்படற ஆய்வுகள்ல நிறைய கவனம் செலுத்துவாங்க. அதைப் பள்ளிகளில் எப்படி கொண்டுவரலாம்னு முயற்சி செய்வாங்க.ஸ்கூல்னா இப்படித்தான் இருக்கணும், இப்படித்தான் நடந்துக்கணும்னு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பரிசோதனை செஞ்சு பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அடிப்படையில், மாணவர்களோட அறிவுத்திறன் வளரணும். அதுவும் இயற்கையா, மகிழ்ச்சியோட வளரணும். அதுதான் குறிக்கோள்.” என்றார் உமா.

“யூனிஃபார்ம் உண்டா மிஸ்?” ஓவியா கேட்க, “நிச்சயம் இல்லை” என்ற உமா மிஸ், தொடர்ந்து, “அதேபோல, வழக்கமான தேர்வு முறைகளும் அங்கே இல்ல. எல்லோரையும் படிக்கவெக்கணும்கிறதுதான் முக்கியம். அவங்களோட டெஸ்டிங் முறையே வேற…”

உமா மிஸ் பெருமூச்சு விடுவதாகத் தோன்றியது ஓவியாவுக்கு. கடமையே என்று சொல்லிக் கொடுப்பதற்கும் விருப்பத்தோடு சொல்லிக்கொடுப்பதற்குமான wவித்தியாசத்தை உமா மிஸ் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட பெருமூச்சாக அது இருக்க வேண்டும்.

கதிருக்குப் பேச்சே எழவில்லை. ஹோம் ஒர்க் இல்லை, சீருடை இல்லை, விளையாடிக்கொண்டே இருக்கலாம், படிக்கும்போது படிக்கலாம்… என்றெல்லாம் எப்படி ஒரு தேசத்தால் யோசிக்க முடிந்தது? பெறோரால் ஏற்க முடிந்தது? நிச்சயம் பின்லாந்து வேறு மாதிரித்தான் இருக்க வேண்டும். பெரியவனானதும் அந்த நாட்டுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

பள்ளி வாசல் வந்தது. மூவரும் பள்ளிக்குள் நுழைந்தனர்.

தகவல் பெட்டகம்

* 8 அல்லது 9 மணிக்குத் தொடங்கும் பள்ளிகள், மதியம் 1 அல்லது 2 மணிக்கு முடிந்துவிடும்.

* வாரத்துக்கு 25 பீரியட்கள். ஒருநாளைக்கு 3 மணி 45 நிமிடங்கள் மட்டுமே பள்ளி நடைபெறும்.

* உலக அளவில் ஆசிரியர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கும் நாடுகளில் ஒன்று, பின்லாந்து

* தேசிய அளவில் பொதுத் தேர்வுகளோ, தரப்படுத்தும் தேர்வுகளோ இல்லை.

* 190 நாட்கள் பள்ளிகள் வேலை செய்யும். ஆகஸ்ட் மாதம் தொடங்கி மே மாதம் வரை கல்வியாண்டு நீளும்.

* பின்லாந்தில் 99.7% சதவீத்தினர் அடிப்படைக் கல்வியை முடித்துவிடுகின்றனர்.

* அங்கே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் சிரமம். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஹெல்சிங்கி பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வில் பங்குபெற்றவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெற்றனர்.

தொடரும்...

- ஆர். வெங்கடேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us