தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செருக்கற்ற ஞாநி!

செருக்கற்ற ஞாநி!

செருக்கற்ற ஞாநி!


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

15.01.2018 அன்று மரணமடைந்த ஞாநி பற்றி, அவரது நெருங்கிய நண்பரும் மூத்த எழுத்தாளருமான திலீப் குமார், தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

சென்ற வாரம் நம்மை விட்டுப் பிரிந்த, 'பட்டம்' இதழின் ஆலோசகரான ஞாநி எனது 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர். 1970-களில் நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் தான் எழுத ஆரம்பித்தோம். அதோடு, பல மாதங்கள் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்தும் இருக்கிறோம். ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரிடம் காணப்படும் பல அரிய பண்புகளை நாம் இயல்பானவைகளாக, சாதாரணமானவைகளாகக் கருதி விடுகிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் மறைவுக்குப் பின்தான் அப்பண்புகளின் மேன்மையையும் சிறப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

நண்பர் ஞாநி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் - அரசியல், சினிமா, நாடகம், ஓவியம், இசை, இலக்கியம், எழுத்து, ஊடகம், மொழிபெயர்ப்பு, பேச்சு, சுற்றுச்சூழல், கல்வி, பெண்கள் நலம் - மிகத் தீவிர அக்கறையோடு, ஆக்கப்பூர்வமாக வினையாற்றியவர். அவரது பன்முக ஆளுமையின் வீச்சும் உயரமும், முன் எப்போதையும் விட இப்போதுதான் துலக்கம் பெற்றுள்ளது. அவர் மிக மிக இயல்பாகப் பின்பற்றிய மதிப்பீடுகள் நம்மில் பெரும்பாலானோர்க்கு என்றுமே கைகூடப் பெறாதவை.

ஞாநியின் ஈடுபாடுகள் பலவேறாக இருந்திருப்பினும் அவற்றை இணைத்த ஒரே ஆதாரச் சரடு அவரது 'தனிமனித நாணயம்'. இந்த ஒற்றைப் பண்பின் காரணமாகத்தான் அவரது எல்லா நடவடிக்கைகளிலும் உண்மையின் துடிப்பை நம்மால் காண முடிந்தது. தனது கடைசி மூச்சு வரை எதற்காகவும் யாருக்காகவும் தனது மதிப்பீடுகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதவர் ஞாநி.

ஞாநி மகாகவி பாரதியாரின் எழுத்துகளில் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். அநேகமாக அவரது எல்லா செயல்களிலும் பாரதியாரின் தாக்கம் இருந்தது. 'சின்ன சங்கரன்' என்ற புனைப்பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். தன் பதிப்பகத்தின் பெயரையும் கூட 'ஞானபாநு' என்று வைத்துக்கொண்டார். அந்த அளவுக்கு பாரதியால் உந்துதல் பெற்று இயங்கியவர் ஞாநி.

நாம் இன்று புத்தகங்களிலும், அரசாங்க கட்டடங்களிலும், அலுவலகங்களிலும் பார்க்கும் பாரதியாரின் படத்தை வரைந்தவர் முதுபெரும் விடுதலைப் போராளியான பாஷ்யம் என்கிற ஆர்யா. இன்றளவும் இந்தப் புகைப்படம்தான் உலகெங்கும் அதிகாரப் பூர்வமான பாரதியார் படமாக அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால், அதேபோல் பாரதியாரின் முற்போக்கு மற்றும் நவீன சிந்தனைகளைப் பறைசாற்றும் விதமாக வெறும் பாரதியின் புருவங்களையும் மீசையையும் வைத்தே ஒரு ஓவியத்தை ஞாநியும் வரைந்திருக்கிறார். இந்த ஓவியமும் கடந்த 15 - -20 ஆண்டுகளாக மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓவியத்திற்கான காப்புரிமையைக் கூட, தானே முன்வந்து மக்களுக்குச் சமர்ப்பித்து விட்டார்.

பாரதியாரின் எழுத்துகளோடு இணைந்து எங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். 1982-ம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழாவின் போது, ஒரு நாள், நானும் ஞாநியும் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்குப் பின்புறம் இயங்கி வந்த தேசிய புத்தகக் கழகத்தின் விற்பனையகத்தில் 'பாரதியாரின் கட்டுரைகள்' என்ற நூலை வாங்கச் சென்றோம்.

புத்தகத்தை வாங்கிய பின் அங்கேயே வைத்து அதை படிக்கவும் செய்தோம். திடீரென்று எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாரதியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரது உரைநடை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சோதித்துப் பார்க்க விரும்பினோம். உடனே, ஞாநி நூலகக் கட்டடத்தின் பிரதான வாயிலருகே நின்று பாரதியாரின் கட்டுரை ஒன்றை உரத்த குரலில் வாசிக்க ஆரம்பித்தார்.

“… இஃது எவ்வாறாயினும் ஸமஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரிகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன…” என்று படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அண்ணா சாலையில் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்த ஜனத்திரளிலிருந்து ஒவ்வொருவராக எங்களைச் சுற்றி குழும ஆரம்பித்தனர்.

சட்டென்று கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் சேர்ந்துவிட்டனர். ஞாநி என்ன வாசிக்கிறார் … அது யாருடைய எழுத்து... என்பது தெரியாவிட்டாலும் சுற்றி இருந்த ஒவ்வொருவரும் கட்டுரையின் கருத்தாழத்தையும் மொழியழகையும் ஆமோதித்தும் ரசித்தும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த முழுக்கட்டுரையையும் வாசிக்க சுமார் பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். வாசித்து முடித்தபின் தான் ஞாநி கூட்டத்தினருக்கு தான் வாசித்தது பாரதியாரின் கட்டுரை என்பதைத் தெரிவித்தார்.. இந்த அனுபவம் குழுமியிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் கூட மிகப் பெரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

ஒருவரோடு நாம் நெருங்கிப் பழகப் பழக (அது தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பன், யாராக இருந்தாலும்) அவர்களையும் உள்ளடக்கிய ஒரு மன உலகம் மெல்ல மெல்ல நமக்குள் உருவாகிவிடும். இப்படி நாம் நெருங்கிப் பழகியவர்கள் திடீரென்று மறையும்போது, அவர்களோடு நமது அந்த 'அந்தரங்க' மன உலகமும் காணாமல் போய்விடும். அது ஏற்படுத்தக்கூடிய வெற்றிடம் மிக துக்ககரமானது. வேறு எதனாலும், யாராலும் ஈடு செய்ய முடியாதது. இன்று நானும், அவருடைய ஏராளமான நண்பர்களைப்போல, இத்தகைய மன நிலையில் தான் உள்ளேன்.

நண்பர் ஞாநி நம்மிடையே இப்போது இல்லை. ஆனால், இன்னும் நூறாண்டுகளுக்குப் பின்பு யாராவது ஒருவர் அண்ணா சாலையில் நின்று ஞாநியின் எழுத்துகளை உரக்க வாசிக்க நேர்ந்தால், அவரது கருத்தும் மொழியும் 100-க்கும் மேற்பட்டவர்களை நிச்சயம் வசீகரிக்கும் என்று நம்புகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us