தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஓலைச்சுவடிகளின் காலம்

ஓலைச்சுவடிகளின் காலம்

ஓலைச்சுவடிகளின் காலம்


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்குறள், தேவாரம், திருவாசகம், அகநானூறு, புறநானூறு என அனைத்து வகையான இலக்கியங்களும் இன்று நமக்கு நூல் வடிவில் கிடைக்கின்றன. ஒலி, ஒளி உருமாற்றம் செய்யப்பட்டு கண்களால் பார்க்கவும், காதுகளால் இசையோடு கேட்கவும் செய்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் இவை யாவும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு இருந்தன.

ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை உ.வே.சாமிநாதைய்யர், சதாசிவ பண்டாரத்தார், புலவர் சோமசுந்தரனார் போன்றோர் அச்சு நூல்களாகக் கொண்டு வந்தனர்.

ஓலைச்சுவடிகளில் எழுவதென்பதே ஒரு கலை. இப்போதிருப்பது போல் அப்போது தாள்கள் கிடையாது என்பதால் பேனாக்களும் கிடையாது. இரும்பால் செய்யப்பட்ட கூரிய ஆணிகொண்டு ஓலையில் எழுதினர். இந்த ஆணிக்கு எழுத்தாணி என்று பெயர். இந்த எழுத்தாணி ஒரு முனையில் எழுதுவதற்கு ஏற்ப கூராகவும், மறுமுனையில் ஓலையைச் சீவுவதற்கு ஏற்ற வகையில் கத்தி வடிவிலும் இருக்கும்.

எழுத்தாணிகள் குண்டு எழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கு எழுத்தாணி என பல வகைகளில் இருந்தன. ஓலை சாதாரண பனை, கூந்தல் பனை, தாளிப்பனை என வகைப்படுத்தப்பட்டன. பனை மரத்தின் ஓலைகளை நறுக்கி துளையிட்டு கயிறு போட்டு கோப்பர். ஈரமணல் அல்லது ஈரமண் ஆகியவற்றில் புதைத்தோ நீராவியில் வேக வைத்தோ எழுதுவதற்கு ஏற்ற வகையில் ஓலையைப் பதப்படுத்துவர். பிறகு இதை நிழலில் ஊறவைத்து, ஓலையின் மீது கூழாங்கற்கள் கொண்டு தேய்த்து வழவழப்பைப் போக்குவர். பதப்படுத்தப்பட்ட ஏடுகள் 90 டிகிரி வளையும் தன்மை கொண்டவை. பதப்படுத்தாவிடில் காய்ந்த பிறகு ஏடுகள் கைப்பட்டாலே உடைந்து விடும்.

எழுதப்பட்ட சுவடிகள் ஒவ்வொன்றும் நானூறில் இருந்து ஐநூறு ஆண்டுகள் வரை பயன்தரும். பிறகு மூலச் சுவடியிலிருந்து புதிய ஓலையைத் தயார் செய்து, அந்த நூலை எழுதிப் பாதுகாப்பார்கள். இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளாக ஓலைச்சுவடி நூல்கள் படியெடுக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உ.வே. சாமிநாதைய்யர் நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற இடங்களில், ஓலைச்சுவடி நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் படித்து அறிவதற்கு ஏதுவாக, சுவடியில் பயிற்சி பட்டறைகளையும் அந்த அமைப்புகள் நடத்தி வருகின்றன.

ஒரு முறையேனும் ஓலைச்சுவடி இருக்கும் இடங்களுக்குச் சென்று வாருங்கள். தமிழின் தொன்மையை அறிந்து மகிழுங்கள்.

-மணி.மாறன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us