தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விதைப் பெட்டியில் மீன்கள்

விதைப் பெட்டியில் மீன்கள்

விதைப் பெட்டியில் மீன்கள்


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி நிறைவடைந்ததற்கான மணி ஒலித்தது. மாணவர்களெல்லாம் பையைத் தூக்கிக்கொண்டு வீடுநோக்கி விரைந்தார்கள்.

தமிழாசிரியர் தங்கமுத்து, மிதிவண்டியை எடுத்துக்கொண்டார். அதை மெதுவாகத் தள்ளியபடி நடந்தார்.

அங்கே வரிசையாகப் பல கடைகள். சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஏதேதோ தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டபடி இருந்தார்கள்.

தங்கமுத்து ஐயாவின் வகுப்பிலுள்ள சரவணன், தன்னுடைய மதிய உணவுப் பாத்திரத்தில் நிறைய கடலை வாங்கிக்கொண்டிருந்தான். அவரைப் பார்த்ததும் வெட்கத்துடன் சிரித்தான். ''வர்றேங்கய்யா'' என்றான்.

''என்னடா? நிலக்கடலையா?'' என்று சிரித்தார் தங்கமுத்து. ''காலையில இந்தப் பாத்திரத்துல என்ன கொண்டுவந்தே?''

''இட்லிங்கய்யா.''

''காலையில இட்லி கொண்டுவந்துட்டீங்க, அதைச் சாப்பிட்டதும், பாத்திரத்தை ஏன் காலியாத் திரும்பக் கொண்டுபோகணும்ன்னு அதே பாத்திரத்துல நிலக்கடலையை நிரப்பிட்டீங்கபோல, அருமை! '' என்றவர், ''சங்ககாலத்துல நம்ம முன்னோர்களும் இப்படித்தான் இருந்திருக்காங்க.''

''அப்படியா?''என்றபடி சில மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ''அதைபத்திக் கொஞ்சம் விரிவாச் சொல்லுங்கய்யா.''

''உழவர்களெல்லாம் வயலை நல்லா உழுதப்புறம், அங்கே விதைக்கறதுக்காகப் பெட்டியிலே விதைகளைக் கொண்டு வருவாங்களாம். ஈரமான நிலத்திலே விதைகளை நல்லா ஊன்றுவாங்களாம்.''

''அதுக்கப்புறம்?''

''வீட்டுக்குத் திரும்பவேண்டியதுதான்! ஆனா, விதை கொண்டுவந்த பெட்டி காலியா இருக்குமே, அதை ஏன் காலியா கொண்டுபோகணும்ன்னு அவங்க யோசிப்பாங்களாம். பக்கத்துல இருக்கிற நீர்நிலைகளுக்குப் போய் அங்கே இருக்கிற மீனையெல்லாம் பிடிச்சு அந்தப் பெட்டிகளிலே போட்டுக்குவாங்களாம்.''

''அதாவது, காலையிலே இட்லியோட வந்த எங்க பாத்திரமெல்லாம் மாலையிலே நிலக்கடலையோட திரும்பறமாதிரி, அவங்க விதைப்பெட்டியைக் கொண்டுவந்து மீன்பெட்டியைக் கொண்டுபோவாங்க. அப்படித்தானே? ''

''ஆமாம்'' என்றபடி ஒரு நிலக்கடலையை உரித்து வாயில் போட்டார் தங்கமுத்து. ''நற்றிணையிலே மிளைகிழான்நல்வேட்டனார்ங்கற புலவர் இதை அழகா வர்ணிச்சிருக்கார்.''

'வித்தொடு சென்ற வட்டி, பற்பல

மீனொடு பெயரும்.'

''வித்துன்னா என்னங்கய்யா?''

''நாம விதைன்னு சொல்றமே, அதுதான் வித்து. எண்ணெய் வித்துக்கள்ன்னு தாவரவியல் பாடத்துல படிச்சிருப்பீங்களே.''

''ஆமாங்கய்யா. வரலாற்றுப்பாடத்துலகூட, இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட பெரியோர்கள்ன்னு படிச்சிருக்கோம்.''

''சரியாச் சொன்னே, வித்துன்னா விதை, வித்திடுதல்ன்னா விதைத்தல்.''

''இந்தப் பாட்டுல வட்டின்னு ஒரு சொல் வருதே'' என்றான் ஒருவன். ''வங்கியிலே நம்ம பணத்துக்கு வட்டி தருவாங்களே, அதுவா இது?''

தங்கமுத்து பெரிதாகச் சிரித்தார், ''அது வேற வட்டி, இது வேற வட்டி'' என்றார். ''இங்கே சொல்ற வட்டிங்கறது ஒரு பெரிய, வட்ட வடிவப் பாத்திரம், அதுலதான் அன்றைய உழவர்கள் விதையை எடுத்துகிட்டுப் போனாங்களாம்! ''

''ஒருவிதத்துல நீங்கல்லாம்கூட அந்த உழவர்களைப்போலதான். தினமும் மூளைமுழுக்கக் கேள்விகளோட வர்றீங்க, நாள்முழுக்கப் பல விஷயங்களைக் கத்துக்கறீங்க, அதையெல்லாம் மூளையிலே நிரப்பிகிக்கிட்டு மகிழ்ச்சியா வீட்டுக்குப்போறீங்க. ஏன்னா, மூளை எப்பவும் காலியா இருக்கக்கூடாது. ஏதாவது நல்ல விஷயங்களை அதுல நிரப்பிகிட்டேயிருக்கணும்.''

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us