PUBLISHED ON : மார் 24, 2025

* நகங்கள் இறந்த செல்களால் ஆனவை. இதனால்தான் கை, கால் நகங்களை வெட்டும்போது வலிப்பதில்லை. எப்படி முடியை வெட்டும்போது வலிப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.
* தோலுக்கு அடியில் இருக்கும் நகத்தின் பகுதி மட்டுமே உயிருள்ளது. நகத்தின் வேரான இந்தப் பகுதிக்கு ரத்தம் பாய்ந்து வளர்வதற்கு உதவுகிறது.
* கைவிரல் நகங்கள் கெரட்டின் (Keratin) எனப்படும் மூன்று அடுக்கு திசுக்களால் ஆனது. இது முடி, நகங்களில் உள்ள ஒரு புரதமாகும். விலங்குகளிலும் காணப்படுகிறது.
* கைவிரல் நகங்கள் மாதத்திற்குச் சராசரியாக 3.5 மில்லிமீட்டர் வளர்கின்றன. கால்விரல் நகங்களோ கிட்டத்தட்ட இதில் பாதி அளவே வளர்கின்றன. அதிகமாகப் பயன்படுத்தும் கையின் நகங்களே வேகமாக வளர்கின்றன. ஆண்களின் கைவிரல் நகங்கள், பெண்களின் நகங்களை விட வேகமாக வளரும்.
* கோடைக்காலத்தில் நகங்கள் வேகமாக வளர்கின்றன. கோடையில் மனித உடல் அதிக வைட்டமின் டி யை உட்கொள்கிறது. இதன் விளைவாக நக வளர்ச்சி அதிகமாகிறது.
* கட்டை விரல் நகம் மிக மெதுவாக வளரும், நடுவிரல் நகம் மிக வேகமாக வளரும்.
* வயதாகும்போது கைவிரல் நகங்களின் வளர்ச்சி குறைகிறது.
* கின்னஸ் உலக சாதனை பட்டியலின் படி, உலகின் மிக நீளமான கைவிரல் நகங்கள் டயானா ஆம்ஸ்ட்ராங் (Diana Armstrong) என்பவருடையதாகும். இரண்டு கை விரல்களும் சேர்த்து அதன் நீளம் 42 அடி 10.4 அங்குலம்!
* நகப்பூச்சு (Nail Polish) பொ. யு. மு 3000இல் சீனாவில் இருந்ததாகப் பதிவு இருக்கிறது. அவர்கள் தேன் மெழுகு, முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி சாயங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி நகப்பூச்சுகளை உருவாக்கினர். ஆரம்பத்தில் கறுப்பு, சிவப்பு போன்ற அடிப்படை வண்ணங்கள் பயன்பட்டன.