PUBLISHED ON : மார் 24, 2025

கர்நாடக மாநிலம் ஹம்பியில் ஆயிரக்கணக்கான வரலாற்றுப் புகழ்மிக்க சிற்பங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. கணேசர், தண்ணீர் சிவலிங்கம் என நிறைய சிலைகள் உயரமாக, பிரமாண்டமாகச் செதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் அந்தச் சிலைகள் எல்லாவற்றையும் விட, மிகப் பெரிய சிற்பம் லட்சுமி நரசிம்மர் சிலைதான். 6.7 மீட்டர் உயரமானது.
பொ.யு.1528இல் விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் காலத்தில், கிருஷ்ணபட்டா என்பவரால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நரசிம்மரின் இடது மடியில் லட்சுமி அமர்ந்து இருந்ததாகவும் அந்தச் சிற்பத்தை, 1565இல் பிஜாப்பூர் சுல்தான்கள் போரின் போது உடைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிதைந்த லட்சுமி சிலை, ஹம்பி கமலாபுரம் பகுதியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
பிரமாண்டமான நரசிம்மர் சிற்பத்தைப் பார்த்த படையெடுப்பாளர்கள், இங்கே ஏதேனும் பாதாள அறைகளில் அரசு பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, இந்த நரசிம்மர் சிலையை உடைக்க முயன்றதாகவும், பிறகு முடியாமல் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.