PUBLISHED ON : ஜன 27, 2025

தட்டைப்புழுக்கள் (Flatworm) கடலில் மட்டுமே வாழ்கின்றன.
தவறு. உலகெங்கிலும் தட்டைப்புழுக்கள் பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகின்றன. இவை கடல், நன்னீர், நிலம் உள்ளிட்ட சூழல்களில் வாழக்கூடியவை. இவற்றில் 4 பகுப்புக்கள் உள்ளன. அவை டர்பெல்லேரியா (Turbelleria), ட்ரேமடோடா (Trematoda), செசுடோடா (Cestoda), மோனோஜீனியா (Monogenean) என்பவையாகும். இவற்றில் டர்பலேரியாவைத் தவிர ஏனைய மூன்று வகுப்புக்களைச் சார்ந்தவை ஒட்டுண்ணிகள்.
இவை மற்ற உயிரினங்களின் உடலுக்கு உள்ளேயோ அல்லது தோல் மீதோ வாழ்ந்து அவற்றிலிருந்து ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன. மனிதர்களைப் பாதிக்கும் முக்கியமான ஒட்டுண்ணித் தட்டைப்புழுக்களில் ஒன்று நாடாப்புழு. இவை மனிதர்களின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன.
சில தட்டைப்புழுக்கள் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டாலும், ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினமாக வளரக்கூடியது. இவை எளிய நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளன. இதில் மூளை, நரம்பு வடங்கள் அடங்கும். இந்த நரம்பு மண்டலம் அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.