PUBLISHED ON : நவ 12, 2018

மாணவப் பருவத்தில் சேமிப்பின் பலனைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். இன்றைய நவீன உலகத்தில் பணத்தின் அருமையை மாணவர்கள் உணர்ந்துள்ளனரா என்பதை அறிய, பாக்கெட் மணி கிடைக்கிறதா? அதை என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டிருந்தோம். நமது மாணவ வாசகர்களின் கருத்துகளை அறிய, சென்னை, செம்பாக்கம், சியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:
ஆனந்த்குமார் (11ஆம் வகுப்பு)
எனக்கு பாக்கெட் மணியை அம்மாவோ, அப்பாவோ கொடுக்க மாட்டாங்க. என்னுடைய தாத்தா கொடுப்பார். கூடுதலாகக் கேட்டால், ஐம்பது ரூபாய் வரையும் கொடுப்பார். தின்பண்டங்கள் வாங்கி நண்பர்களுடன் சாப்பிடுவதற்கு அந்தப் பணத்தைச் செலவு செய்வேன்.
திவ்யதர்ஷினி (11ஆம் வகுப்பு)
என் அப்பா தினமும் 5 ரூபாய் கொடுப்பார். அதை சின்ன பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொள்ளச் சொல்லிக் கொடுப்பார். சில நாட்கள் பிஸ்கட் வாங்குவேன். சில நாட்கள் சேர்த்து வைத்து, தோழிகளுடன் வேறு எதையாவது வாங்கி சாப்பிடுவோம்.
அபிஷேக் (7ஆம் வகுப்பு)
பாக்கெட் மணி கொடுப்பதில்லை. கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும். எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். எப்போதாவது என் அண்ணனுடன் படத்திற்குப் போகவேண்டும் என்று சொன்னால், பணம் கொடுப்பார்கள்.
கீர்த்தனா (9ஆம் வகுப்பு)
வீட்டில் அவங்களா பாக்கெட் மணி எதுவும் கொடுக்கமாட்டார்கள். கேட்டால் கொடுப்பார்கள். எப்பவாச்சும் நானும் வாங்கி, அதை சேமிப்பேன். குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும், அந்தப் பணத்தில் பிரியாணி ஆர்டர் செய்துவிடுவேன். பிரியாணி சாப்பிடுவதற்காகவே காசு சேர்ப்பதாக வீட்டில் கிண்டல்கூட செய்வாங்க. அதையும் ரசித்துக்கொண்டே, பிரியாணியை ருசிப்பேன்.
ஆலன்பால் (8ஆம் வகுப்பு)
கேட்டது கிடைக்கும் என்பதால், என் வீட்டில் தனியாக பாக்கெட் மணி கொடுப்பதில்லை. எப்போதாவது பள்ளியில் இருந்து டூர் போகும்போது மட்டும்தான் கையில் பணம் கொடுப்பார்கள்.
காவியா (8ஆம் வகுப்பு)
என் வீட்டில் அவ்வப்போது பணம் கொடுப்பாங்க. அந்தப் பணத்தில் கொஞ்சம் சாக்லேட் வாங்கிக்கொள்வேன். மிச்சப் பணத்தைச் சேமிப்பேன். நண்பர்களுடன் சேர்ந்து, 'புதிய பாரதம்' என்ற குழு வச்சிருக்கோம். செடிகள் நடுவது அக்குழுவின் பணிகளில் ஒன்று. அதற்கு என் சேமிப்பில் இருக்கும் பணத்தைக் கொண்டு, செடி வாங்குவேன். கடந்த மாதம்கூட மல்லிகைச் செடி வாங்கி நட்டுவச்சோம்.
