PUBLISHED ON : பிப் 26, 2018

சென்னையில் கடந்த மாதம் புத்தகக் கண் காட்சி நடைபெற்றது. இதே போன்று பல்வேறு நகரங்களிலும் அவ்வப்போது நடைபெறுகிறது.
முன்பெல்லாம் மிகப்பெரிய நகரத்தில்தான் புத்தகக் கண்காட்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது அனைத்து நகரங்கள், சிற்றூர்களில்கூட அவ்வப்போது இதுபோன்ற கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து பெரியவர்களும் சிறுவர்களும் வந்து கண்காட்சியைப் பார்க்கிறார்கள்.
பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகளைப் பதிப்பாளர்களின் கூட்டமைப்புகள்தான் ஏற்பாடு செய்கின்றன. தனிப்பட்ட பதிப்பாளர்கள், உள்ளூரில் இருக்கும் சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள் நடத்தும் கண்காட்சிகளும் உண்டு.
கண்காட்சியை நடத்தும் அமைப்பினர், அதற்காக ஒரு நல்ல இடத்தை வாடகைக்குப் பெறுவார்கள். அங்கே பதிப்பாளர்களுக்கான தனித்தனி சிறு அரங்குகளை அமைப்பார்கள். அவற்றைப் பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்குக் கட்டண அடிப்படையில் வழங்குவார்கள். அவர்கள் தங்களுடைய அரங்குகளில் தாங்கள் வெளியிட்ட, விற்பனைசெய்கிற நூல்களை அழகாக அடுக்கிவைப்பார்கள்.
நூல்களை அடுக்கினால் போதுமா? வாங்குவதற்கு மக்கள் வரவேண்டாமா? கண்காட்சி நடைபெறும் இடம், நாட்கள், நேரம் போன்ற விவரங்களைச் சுவரொட்டிகளாக, துண்டுப்பிரசுரங்களாக ஊர்முழுக்க வெளியிடுவார்கள். அங்குள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள். வானொலி, தொலைக்காட்சி, சுவர் விளம்பரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்துவதுண்டு.
இதன்மூலம், மக்களுக்கு இந்தக் கண்காட்சியைப் பற்றிய விவரங்கள் தெரியவரும். அவர்கள் நூல்களைப் பார்க்கவும் வாங்கவும் இங்கே வருவார்கள். இப்படி வருகிற மக்களிடம் ஒரு சிறு தொகையை நுழைவுக்கட்டணமாக வசூலிப்பார்கள். இலவச அனுமதி அளிப்பவர்களும் உண்டு. நுழைவுக்கட்டணம் வாங்கும் புத்தகக் கண்காட்சிகளில்கூட, மாணவர்களுக்கு விசேஷ சலுகையாக இலவச அனுமதி கிடைக்கிறது.
மற்ற இடங்களில் வாங்கும் நூல்களுக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கும் நூல்களுக்கும் முக்கியமான வேறுபாடு, இங்கே அனைத்து நூல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கழிவு கிடைக்கும். ஐம்பது ரூபாய் விலையுள்ள நூலை நாற்பத்தைந்து ரூபாய்க்கோ, அதைவிடக் குறைவாகவோகூட வாங்கிவிடலாம்.
இதுதவிர, வருபவர்களின் செவியின்பத்துக்காகப் பிரபல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள், விவாதமன்றங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். சுவைக்கத் தின்பண்டங்கள், உணவு வகைகளும் கிடைக்கும். இப்படிப் பலவிதமான அம்சங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், இப்போதெல்லாம் 'புத்தகக் கண்காட்சி'களைப் 'புத்தகத் திருவிழா' என்று அழைக்கிறார்கள். வாசகர்களும் ஒரு திருவிழா கொண்டாட்ட மனநிலையில் இங்கே வந்துசெல்கிறார்கள்.
பொதுமக்களுக்கான புத்தகத் திருவிழாக்களைப்போலவே, புத்தகத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான கண்காட்சிகளும் உண்டு. இவற்றில் அச்சுத்தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தொடங்கி, ஒரு மொழியில் வெளியான நூல்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வதுவரை பலவிதமான தொழில் அம்சங்கள் பேசப்படும்.
உங்கள் ஊரில் புத்தகத் திருவிழா நடக்கிறதா என்று உங்கள் பள்ளியில் விசாரியுங்கள். அக்கம்பக்கத்தில் எங்கு புத்தகத் திருவிழா நடந்தாலும் சென்றுவாருங்கள். தமிழில் எத்தனை தலைப்புகளில் எத்தனை விதமான நூல்கள் பிரசுரிக்கப்படுகின்றன என்று அறிந்து பெருமிதப்படுவீர்கள்!
- என். சொக்கன்
