PUBLISHED ON : பிப் 26, 2018

மாணவ, மாணவிகளைச் சரியான விதத்தில் வழிகாட்ட ஆசிரியர்களுடைய பங்கு மிகமுக்கியமானது. பாடங்களை எடுப்பது, மதிப்பெண் பெறவைப்பது என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒருபடி மேலே சென்று மாணவ, மாணவியர்களுடைய திறன் வளர்ப்பிற்கு உதவி வருகிறார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திலுள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி டீச்சர்.
வைத்தியநாதபுரத்தில் அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் ரேவதி டீச்சர். ஐந்தாம் வகுப்பு வரை தன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேறு பள்ளிக்குச் செல்லும்போது கஷ்டப்படக் கூடாது என்கிறார் அவர்.
“அடிப்படைக் கல்வி சரியாக அமைந்துவிட்டால், பிள்ளைகள் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்வார்கள். ஆங்கிலம் பேசுவதோ, மற்ற மாணவர்களுடன் பழகுவதோ, கணக்கோ எதுவும் பூதமாகத் தோன்றாது. அதற்காக 'நிலாவெளி' திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கினோம்” என்றார் டீச்சர்.
நிலாவெளித் திட்டம் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்காகத் தொடங்கப்பட்டது. குழுக்களாகப் பிரித்து, ஒருவருக்கு ஒருவர் தெரிந்த பாடங்களைப் பிறருக்குச் சொல்லித்தர வேண்டும். பள்ளி முடிந்ததும் விளையாடி விட்டு, மாலை வேளையில் மாணவ, மாணவிகள் குழுக்களாக இணைந்து படிப்பார்கள் என்றார் ரேவதி டீச்சர்.
“நகரப்பகுதிகளில் இருக்கும் டியூஷன் போன்ற முறை இது என்று பிறர் நினைக்கலாம், நிச்சயம் அப்படியல்ல. இங்கு வருபவர்கள் ஏழைக் குழந்தைகள். வீட்டில் வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவு. பிள்ளைகளுக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், நாளை அவர்களும் வாழ்க்கை ஏணியில் ஏறி முன்னேற முடியும். நிலாவெளி திட்டத்தைப் பற்றி முதலில் பலருக்கும் நம்பிக்கை இல்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் கொடுக்கவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள்தான், பல பேருக்கு நம்பிக்கை அளித்தது. இன்று மற்ற வகுப்பு மாணவர்களும் இதுமாதிரி படிக்க ஆசைப்படுகிறார்கள்.
படிப்போடு இவர்களுடைய திறன்கள் தேங்கிவிடக்கூடாது. அதனால்தான், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தகங்கள் வாசிக்க அவர்களை நூலகத்தில் சேர்த்துள்ளேன். புத்தகங்களை வாசித்து வகுப்பில் மற்றவர்களோடு பகிர்வது, கட்டுரைகள் எழுதுவது என திறமைகளை வெளிப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரேவதி டீச்சர்.
கிராமப்புற மாணவர்களுக்கு இப்படியான ஒரு வழிகாட்டி ஆசிரியர் கிடைத்தால், நாளை அங்கிருந்து நமக்குப் பெரிய பெரிய தலைவர்கள் கிடைக்கலாம். வேர்களை உறுதியாக்கும் ரேவதி டீச்சரின் முயற்சி தொடரட்டும்!