PUBLISHED ON : பிப் 05, 2018

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. (786)
என்ற குறளுக்கு அறிவியல் பூர்வமான நிரூபணம் போன்று ஓர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள நரம்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின் இயக்குனரான கேரோல்யன் பர்கின்சன் (Carolyn Parkinson) இந்த ஆய்வை மேற்கொண்டார். உலகைப் பார்க்கும் விதத்தில், நண்பர்களின் மூளை ஒன்றுபோலவே செயற்படும் என்பதைத் தமது ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
42 தன்னார்வலர்களை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், அவர்களுக்குச் சில செய்தித் துணுக்குகள், இசையுடன் கூடிய காணொளிகள், நகைச்சுவைத் துணுக்குகள், ஆவணப் படங்கள் போன்றவற்றைப் பார்க்கத் தந்தனர். அனைவருக்கும் ஒரே வரிசையில், ஒரே சூழ்நிலையில் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டன.
ஆய்வுக்கு உட்பட்ட நபர்கள், இந்தத் தகவல்களை பரிசீலிக்கும்போது, அவர்களது மூளைச் செயற்பாடுகளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் தொடர்ந்து பதிவுசெய்து வந்தனர். பங்குபெற்ற அனைவரது உணர்ச்சி வெளிப்பாடுகளும் கவனக் குவிப்புகளும் பதிவு செய்யப்பட்டன. பின்னர், பதிவுகள் கவனமாக ஆராயப்பட்டன. நியூரான் எனப்படும் மூளை செல்களின் செயற்பாடு (neural activity patterns) நண்பர்களிடையே ஒன்றுபோலவே இருப்பதைப் பதிவுகள் உறுதிப்படுத்தின.
இதில் இரு நபர்கள், எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களது பதிவுகள் ஒன்றுபோலவே இருந்தன. புறவுலகத் தூண்டல்களை மூளை எதிர்கொள்ளும் விதமே, இரு மனிதர்களிடையேயான நட்பைத் தீர்மானிக்கிறது என்பது உறுதியானது.
“மனிதன் ஒரு சமூக விலங்கு. மற்றவர்களோடு கலந்து பழகுவது, நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சம். இந்நிலையில் மனிதனின் மூளையைப் பற்றி தனித்துப் புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், அம்மூளை மற்றவர்களோடு இணைந்து எப்படிச் செயற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது” என்கிறார் மற்றொரு ஆய்வாளராகிய தலியா (Thalia Wheatley).
இயற்கைத் தொடர்பியல் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) எனும் ஆய்வேட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியானது.