வன்மை என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு வலிமை, கொடுமை என்று பொருள். வண்மை என்றும் ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கொடைத்தன்மை என்று பொருள். இவ்வாறு ஒரேயொரு எழுத்து மாறுவதால், அதன் பொருளே மாறிப்போய்விடும். இந்தக் குழப்பம் நம்மைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கும்.
னகர மெய்யெழுத்து வந்தால் என்ன பொருள்? ணகர மெய்யெழுத்து அந்தால் என்ன பொருள்? இரண்டுக்குமுள்ள பொருள் வேறுபாட்டை நாம் உணர்ந்துகொள்வதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. அதை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.
வலிமை என்ற பொருளைத் தருவது வன்மை என்னும் சொல். இதன் வேர்ச்சொல் வல் என்பது. வல் என்ற வேருக்கு மை விகுதி சேர்ந்து உருவாகும் பண்புப்பெயர்தான் வன்மை. வள்ளல் தன்மை என்று சொல்கிறோம். அது வள் என்னும் வேர்ச்சொல்லோடு தொடர்புடையது. அதனால் வண்மை என்பதற்குக் கொடைத்தன்மை என்பது பொருளாயிற்று.
லகர மெய் னகரத்தோடு தொடர்புடையது. ளகர மெய் ணகரத்தோடு தொடர்புடையது. இதை மனப்பாடமாக உள்ளத்தில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதனால்தான் சொற்புணர்ச்சியில் ல => னகரமாகவும் ள => ணகரமாகவும் மாறி விடுகின்றன.
நூல்+நிலையம் = நூனிலையம் என்று புணரும்.
அருள்+நடை = அருணடை என்று புணரும்.
மெல் என்பதோடு மென்மை பொருள் தொடர்புடையது. பல் (பல) என்பதோடு பன்மை தொடர்புடையது. தொல் என்பதிலிருந்து வருவதுதான் தொன்மை. புல் என்பதிலிருந்துதான் புன்மை. கோல் (செங்கோல்) என்பதிலிருந்துதான் கோன்மை. மேல் என்பதுதான் மேன்மை. ல் = ன் ஆகும் அதன் பொருள் நேர்த்தி இப்போது நன்கு விளங்கியிருக்கும்.
ஆள் என்பதோடு தொடர்புடையதுதான் ஆண்மை. கேள் (உறவு) என்பதோடு தொடர்புடையது கேண்மை. வெள் (வெள்ளை) என்பதே வெண்மை.
மகுடேசுவரன்

