
அரசரின் சபைக்கு ஒரு புலவர் வந்தார். தான் எழுதியிருந்த ஒரு பாடலைப் பாடினார்.
'சிறப்பான பாடல்' என்று பாராட்டினார் அரசர். புலவருக்கு விலையுயர்ந்த பட்டாடையொன்றை வழங்கினார்.
'நன்றி அரசே' என்றார் புலவர். அரசர் தனக்கு வழங்கிய பட்டாடையை ஆசையோடு தடவிப்பார்த்தார்.
அப்போது, அவருடைய கைகளில் ஒரு கிழிசல் தட்டுப்பட்டது. புலவர் அதிர்ந்துபோனார். 'அரசர் வழங்கிய பட்டாடையில் கிழிசலா!'
புத்தம்புதிய பட்டாடைதான் அது. எப்படியோ கிழிந்துவிட்டது. இந்த விஷயம் தெரியாமல் அரசர் அதனைப் புலவருக்கு வழங்கிவிட்டார்.
புலவருக்குக் கிழிந்த பட்டாடையை வாங்கிச்செல்ல மனமில்லை. அதேசமயம், 'அரசே, நீங்கள் தந்த பட்டாடை கிழிந்துள்ளது' என்று சபையினர் முன்னே சொல்லமுடியுமா? அது அரசருக்கு அவமானமல்லவா?
ஆகவே, புலவர் இப்படிப் பேசினார், ''அரசே, நீங்கள் தந்துள்ள பட்டாடை மிக அருமை. இதில் மரம் இருக்கிறது, இலை இருக்கிறது, கிளை இருக்கிறது, பூ இருக்கிறது, பக்கத்தில் பிஞ்சும் இருக்கிறது.''
இதைக்கேட்ட அரசர் விஷயத்தைப் புரிந்துகொண்டார். ''புலவரே, பட்டாடை பிய்ந்திருக்கிறது என்பதைக்கூட நயமாகச் சொன்னீர்கள். உங்கள் திறமைக்குப் பட்டாடை போதாது. பொன்முடிப்பு வழங்குகிறேன்'' என்றார்.
'பிஞ்சும் இருக்கிறது' என்று புலவர் சொன்ன வாக்கியத்தை, இப்படி இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம்:
பிஞ்சும் இருக்கிறது: இந்த ஆடையில் பிஞ்சுகூட இருக்கிறது.
பிஞ்சுமிருக்கிறது: ஆடை பிய்ந்தும் இருக்கிறது
இப்படி ஒரு வாக்கியம் இரு பொருட்களைத் தரும்போது, அதனைச் 'சிலேடை' அல்லது 'இரட்டுறமொழிதல்' என்பார்கள். அதாவது, இரண்டு பொருட்கள் வருமாறு பேசுதல்.
பழங்காலத்தில் பாடல்களிலே இருபொருள் வருமாறு அமைத்துப் பாடும் பழக்கம் இருந்தது. அதாவது, பாடல் ஒன்றுதான். ஆனால், அதை வெவ்வேறுவிதமாகப் பிரித்து இரண்டு பொருட்களுக்குப் பொருந்தும்படி அமைப்பார்கள்.
எடுத்துக்காட்டாக, சிலேடைப்பாடல்களில் சிறந்து விளங்கிய கவிஞர் காளமேகத்தின் பாடலொன்று இப்படித் தொடங்குகிறது:
'நஞ்சிருக்கும், தோலுரிக்கும்.'
இந்தப் பாடல் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் எழுதப்பட்ட சிலேடைப்பாடல். இதே வரிகள் இந்த இரண்டுக்கும் எப்படிப் பொருந்துகின்றன என்று பாருங்கள்:
பாம்பு: நஞ்சு (விஷம்) இருக்கும். தோலை அவ்வப்போது உரிக்கும் வாழைப்பழம்: நஞ்சி (நைந்து, நன்றாகக் கனிந்து) இருக்கும். தோலை உரித்து மக்கள் உண்பார்கள்.
இப்படி இன்னும் பலப்பல சிலேடைப்பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பலவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்வது தனிச்சுவை.
சிலேடை என்பது செய்யுளுக்கு மட்டுமல்ல, உரையாடலிலும் இதைப் பயன்படுத்தியவர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, கி.வா.ஜ.வின் சிலேடைப் பேச்சுகள் தனிநூலாகவே வெளிவந்துள்ளது. அதிலிருந்து ஒரு நகைச்சுவையான எடுத்துக்காட்டு:
கி.வா.ஜ. கலந்துகொண்ட ஒரு கவியரங்கத்தில் எல்லாக் கவிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. அதில் ஒரு கவிஞர், 'வெறும் பொன்னாடைதானா? மாலை இல்லையா?' என்றார்.
உடனே கி.வா.ஜ., ''கவிகளுக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?'' என்று குறும்பாகக் கேட்டார்.
இந்தச் சிலேடைக்கு விளக்கம்: கவி என்றால், கவிஞர் என்று ஒரு பொருள். குரங்கு என்று இன்னொரு பொருள். குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்ன ஆகும்!
இதுபோல் சிலேடைகளைப் புரிந்துகொள்ள நல்ல தமிழறிவும் சொல்வளமும் தேவை. அவ்வகையில், விளையாட்டாக நல்லறிவைப் புகட்டும் உத்தி இது!
- என். சொக்கன்

