
துர்க்மெனிஸ்தானில் நடந்து வரும் ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியில், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த தூரத்தை அவர் 8 நிமிடம் 2 நொடிகளில் கடந்து, இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரட்டை தங்கப்பதக்கம் வென்று சாதனை செய்தவர். 1983க்குப் பிறகு 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிலிருந்து எந்த வீரரும் பங்கேற்றது இல்லை. இந்த அவப்பெயரைத் தகர்த்தெறிந்து 5,000 மீட்டர் ஓடுதளத்தில் ஓடினார் தங்கமகன் லட்சுமணன்.
நம்மூரில் பள்ளி, கல்லூரிகளில் தடகளப் போட்டிகளுக்குப் பெரிய மதிப்பு இல்லை. மவுசு குறைந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவே ஒரு தைரியம் வேண்டும் தானே? ஓடுவதை வாழ்க்கையாகப் பார்த்தார் லட்சுமணன். அதனால் வெறுங்கால் என்றெல்லாம் யோசிக்காமல், முடங்காமல் கரடுமுரடான பாதைகளில் ஓடி, இன்று உலகத்தின் தலைசிறந்த ஓடுதளத்தில் ஓடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
காலில் ஷூ இல்லாமல், புதுக்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிப் பழகினார் லட்சுமணன். புதுக்கோட்டையில் தடகள வீரர்களுக்கு, குறிப்பாக ஏழ்மையில் தவிக்கும் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளை அரவணைத்து, அவர்களுக்கு ஓடுவதற்கான பயிற்சி நிலையமான கவிநாடு விளையாட்டுக் கழகத்தை அமைத்திருக்கிறார் பயிற்சியாளர் லோகநாதன். லட்சுமணனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்.
லட்சுமணன் சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்டார். உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். அம்மா விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். இவர்களுடைய குடும்பத்திற்கு அன்றாட பசியைத் தீர்த்துக்கொள்வதே மிகவும் சிரமம் தான். பிள்ளை வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றினால், நன்றாக இருக்கும் என அவருடைய அம்மா ஒருநாளும் குறைபட்டதில்லை. அவருக்குத் தடகளப் போட்டி, 5,000 மீட்டர், 10,000 மீட்டர் இப்படி எதைப் பற்றியும் தெரியாது. மகன் ஓட விரும்புகிறான், அவனுடைய கனவுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார்.
அப்பா இல்லாத பதின்பருவத்தில், தவறான திசையில் போகாமல் இவரைக் காப்பாற்றியது கவிநாடு விளையாட்டுக் கழகம்.
“எனக்கு ஓடணும், சாதிக்கணும், பயிற்சி கொடுப்பீங்களா” என்ற கேள்வியோடு லோகநாதனை 16 வயதில் சந்தித்துக் கேட்டார் லட்சுமணன்.
சோம்பேறித்தனமே இல்லாமல் பயிற்சிக்குத் தவறாமல் வந்துவிடுவார். கடின உழைப்பும், செயல் மீது இருந்த தீவிரமும், அவரை புதுக்கோட்டையிலிருந்து துர்க்மெனிஸ்தானுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
பெரிய பெரிய மைதானங்களில் ஓட வேண்டும் என அடிக்கடி லட்சுமணன் சொல்வாராம்.
20 வயதில் தேசிய அளவில் சாதனைகள் செய்யத் தொடங்கினார். சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு இந்திய ராணுவத்தில் வேலை கிடைத்தது.
அதன்பின் இந்திய ராணுவம் செய்த உதவியால், சர்வதேச அளவிலான போட்டிக் களத்திற்கான கதவு திறந்தது. சர்வதேசப் போட்டிகளில் பிரகாசிக்கத் தொடங்கினார் லட்சுமணன். ஆசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களைப் பெற்று, இந்தாண்டு, தடகளப் போட்டிகளில் தலைப்புச் செய்தியானார்.
உலகத் தடகளப் போட்டியாளர்களை ஈர்க்கும் 'வேர்ல்ட் அத்லெடிக் சாம்பியன்ஷிப்'பில் இந்தியா சார்பாக விளையாடுவதே அடுத்த இலக்கு.
ஒவ்வொருவரின் சாதனைகளுக்குப் பின்னும் வலிமிகுந்த பயணம் இருக்கிறது. பெரிய கனவுகளுக்குத் தீனி போட உழைப்பு மட்டுமே போதாது. அதற்கு உதவியும் தேவைப்படுகிறது. இந்தச் சமயத்தில் லோகநாதன் பயிற்சியாளராக மட்டும் இல்லாமல், அப்பாவின் இடத்திலிருந்து, அவரை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். கனவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் லோகநாதன். அவர் நிறைய சாதனையாளர்களை உருவாக்கவும், லட்சுமணன் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வாழ்த்துகள்.

