காற்று மாசை குறைக்க புதிய வழி டில்லியில் பேருந்து கட்டணம் குறைப்பு
காற்று மாசை குறைக்க புதிய வழி டில்லியில் பேருந்து கட்டணம் குறைப்பு
PUBLISHED ON : டிச 26, 2016

டில்லியில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு, கட்டணத்தில், 75 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, காற்று மாசுபாட்டால் டில்லி நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதால், காற்று மாசை குறைக்க முடியும் என்று டில்லி அரசு நம்புகிறது. இதனால், புதிய சலுகைத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. டில்லியில் சாதாரண பேருந்துகளில் 15 ரூபாய் வரையும், ஏ.சி. பேருந்துகளில், 25 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய சலுகையால், கட்டணம் சாதாரண பேருந்துகளில், 5 ரூபாயாகவும், ஏ.சி. பேருந்துகளில் 10 ரூபாயாகவும் குறைய உள்ளது. இதுமட்டுமின்றி, 21 வயதிற்குட்பட்ட மாணவர்கள், விதவைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பொதுமக்களை பேருந்தில் பயணம் செய்ய வைக்க வேண்டும் என்பதே, முக்கிய குறிக்கோள். இதன்மூலம், இருசக்கர, நான்கு சக்கர வாகன நெரிசல் குறையும்,'' என்றார். இந்த சலுகை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.