PUBLISHED ON : டிச 26, 2016
பெங்களூருவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை, முழுக்க முழுக்க ரோபோட்டுகளே வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ளன. ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் சுதிப்தா குமார் பாலா, 29, சரோஜித் அடாக், 35. இவர்களின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையை, மருத்துவர்களே நேரடியாக செய்யாமல், அதிநவீன ரோபோட்டுகளை கொண்டு செய்து முடித்தனர். இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகி கூறியதாவது:
பிரம்மாண்ட திரைக்கு முன் அமர்ந்த மருத்துவர்கள், அங்கிருந்தபடி நோயாளிகளுக்கு ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். மனித கைமூட்டுக்கு 270 டிகிரிதான் சுழற்சித் தன்மை. ஆனால், ரோபோக்களுக்கு 360 டிகிரி சுழற்சித் தன்மை உள்ளது. இதனால், விரைவாக, ரோபோக்கள் அறுவை சிசிச்சையை முடித்து விட்டன. நோயாளிகளுக்கும் வழக்கமாக ஏற்படும் வலியை விட குறைவான வலியே ஏற்பட்டது. ரோபோட்டுகள் அளித்த துல்லிய முப்பரிமாண புகைப்படங்கள், நோயாளியை கண்காணிப்பதில் பெரிதும் உதவியாய் இருந்தன. இவ்வாறு, அவர் கூறினார்.