PUBLISHED ON : டிச 26, 2016
அணு ஆயுதம் ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் நிர்பாய் ஏவுகணை பரிசோதனை, நான்காவது முறையாக தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அணு ஆயுதம் ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அதிநவீன நிர்பாய் (Nirbhay) என்ற ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர். டி.ஆர்.டி.ஓ. எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால், முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது 1,000 கிலோ மீட்டர் வரையுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. கடந்த 2013 முதல், மூன்று முறை ஏவி, விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர். தொழில்நுட்பக் கோளாறால், சோதனைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், கடந்த வாரம், நான்காவது முறையாக ஒடிசா மாநிலத்தின் பலாசூர் ஏவுதளத்தில் இருந்து வங்கக் கடலில் இலக்கை நோக்கி நிர்பாய் ஏவுகணை ஏவப்பட்டது. ஏவிய, சில நிமிடங்களிலேயே ஏவுகணை, நடுவானில் வெடித்துச் சிதறியது. நிர்பாய் ஏவுகணை பரிசோதனை நான்காவது முறையாக தோல்வியில் முடிந்தாலும், தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.