PUBLISHED ON : மார் 06, 2017

“இந்த வருடமும் மகளிர் தினம் கொண்டாடப் போகிறோமா?” என்று கேட்டது வாலு. “ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவோம். எல்லா நாளும் மகளிரைக் கொண்டாடுவோம்” என்றான் பாலு.
இந்த வருடம் கூடுதலாக நாம் மார்ச் 9 அன்று கிட்னி டேவும் கொண்டாடவேண்டும் என்றார் ஞாநி மாமா. “நீங்க டயாலிசிஸ் செய்யறதுனாலயா?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டேன். “நீங்கல்லாம் டயாலிசிஸ் செய்யற நிலைமை வரக் கூடாதுங்கறதுக்காக !” என்றார் மாமா.
கிட்னியை நாம் சிறுநீரகம் என்கிறோம். உண்மையில் இன்னும் பொருத்தமான சொல்லைக் கண்டுபிடிக்கவேண்டும். ஏனென்றால் கிட்னி கழிவுகளை அகற்றி சிறுநீரை தன் அகத்தே உருவாக்கி அனுப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை. அது தவிர உடலுக்குத் தேவையான பல சுரப்புகளும் அதிலிருந்து வருகின்றன. ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை உடல் உற்பத்தி செய்ய உந்தும் சுரப்பு கிட்னியிலிருந்துதான் வருகிறது. உடலுக்குத் தேவையான குளூகோஸ், அமினோ அமிலங்களை உடல் உறிஞ்சிக்கொள்ள கிட்னிதான் உதவுகிறது.
நிறைய பேருக்கு நம் உடலில் எந்த உறுப்பு எங்கே இருக்கிறது என்பது கூட சரியாகத் தெரிவதில்லை. என் சிநேகிதி நளினியிடம் கேட்டேன். “கிட்னி எங்கே இருக்கிறது? சொல்”. அவள் பின்பக்கம் குண்டியைத் தொட்டுக் காட்டினாள் என்று பாலுவிடம் சொன்னதும் பாலு 'கெட்ட வார்த்தையெல்லாம் பேசாதே” என்றான். குண்டி நல்ல தமிழ்ச் சொல் என்று எங்கள் தமிழாசிரியர்தான் சொன்னார். உட்காருகிற அதாவது குந்துகிற இடம் குந்தி. அதுதான் பேச்சில் குண்டியாகிவிட்டது.
இரண்டு கிட்னி இருப்பதால், அவை இரண்டும் அவரை விதை வடிவத்தில் இருப்பதால், நளினி அவை பின்பக்கம் இருப்பதாக நினைத்துவிட்டாள். உண்மையில் அவை இன்னும் மேலே இடுப்புக்கு பின்னே இரண்டு பக்கமும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அரை அடி நீளம் கூட கிடையாது. அவற்றுக்குள் ஆயிரக்கணக்கான வடிகட்டிகள் இருக்கின்றன. கழிவுகளை வடிகட்டி, சத்துகளை உறிஞ்சி, ஓயாமல் வேலை செய்துகொண்டே இருக்கின்றன.
உண்மையில் ஒரு கிட்னி ஒழுங்காக வேலை செய்தாலே நமக்குப் போதும். உபரியாக இன்னொன்றும் இருக்கிறது. இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்யப்படும்போது, ஒருவரின் கிட்னிகளால் இரண்டு பேருக்குப் பயன் கிடைக்கும். தவிர இறந்தால்தான் கண் தானம் செய்ய முடியும். உயிரோடு இருக்கும்போதே ஒரு கிட்னியை இன்னொருத்தருக்குத் தரலாம்.
“அதற்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருக்கும் தந்துவிடமுடியாது. உடன்பிறந்தவர்கள், ரத்த உறவு உடையவர்கள், நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த வழிமுறைகள் சில வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.” என்றார் மாமா.
“அதற்கு முன்னால்?” என்று கேட்டேன்.
“பணம் கொடுத்து ஒருவரின் கிட்னியை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பல ஏழைகளை ஏமாற்றியோ, நயமாகப் பேசியோ கிட்னியை எடுத்துக் கொள்வது, அதற்கென்றே மருத்துவமனைகளுக்காக சில இடைத்தரகர்கள் வேலை செய்வது என்பதெல்லாம் நடந்தது. கடும் நடவடிக்கை எடுத்து, அதையெல்லாம் அரசு நிறுத்தியது.”என்றார் மாமா.
உடல் உறுப்பை விற்பது என்று கேட்கவே அருவெறுப்பாக இருந்தது. எப்படி அப்படியெல்லாம் ஒருவர் யோசிக்க முடியும் என்று நினைத்தேன்.
“ஒரு வணிக சமுதாயத்தில் எல்லாவற்றையும் வணிகமாக சிந்திக்க நாம் மெல்ல மெல்ல பழக்கப்படுத்தப்படுகிறோம். பழகிய பின்னர் அது நமக்கு தப்பாகத் தெரியாமல், அதுதான் இயல்பானது என்று நம்ப ஆரம்பித்துவிடுவோம். யாராவது அறம் என்று கேட்க ஆரம்பித்தால், வணிகத்துக்கு அறம் தேவையில்லை என்று சொல்லிவிடுவார்கள்.”என்றார் மாமா.
“எல்லாவற்றையும் வணிகப் பார்வையில் பார்க்க ஒருத்தரை எப்படி பழக்க முடியும்?” என்று கேட்டான் பாலு.
“நீ விளையாடும் விளையாட்டு, நீ எழுதும் பள்ளி இறுதித்தேர்வு எல்லாவற்றிலும் இந்த அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.” என்றார் மாமா. எப்படி என்றேன்.
“தேர்வின் நோக்கம் என்ன? உனக்கு எவ்வளவு தெரியும் என்று மதிப்பிடுவதுதானே. ஆனால் நடைமுறையில் அது உனக்கும் இன்னொருத்தருக்குமான போட்டியாக மாறிவிட்டது. நீ எப்போதும் சக மனிதர்களுடன் போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போலத்தான் எல்லா நடைமுறைகளும் இருக்கின்றன. சக மனிதர்களுடன் ஒத்துழைப்பது என்ற கோட்பாடு இதனால் பலவீனமாக இருக்கிறது.”
விளையாட்டில் எப்படி வணிகப் பார்வை புகட்டப்படுகிறது என்று கேட்டேன்.
“நாம் டிரேட் என்று ஒரு விளையாட்டு இங்கே விளையாடுகிறோம் அல்லவா?”
“ஆமாம். தாயம் சுழற்றி ஆடுவோம். ஒவ்வொரு கட்டமாக நகர்ந்ததும், அந்த ஊரை விலை கொடுத்தோ ஏலத்திலோ வாங்கலாம். கடைகள் இருக்கும் கட்டத்துக்குப் போனால் செலவு செய்யலாம். கடைசியில் யார் அதிக ஊர்களை வாங்கினாரோ அவர்தான் ஜெயித்தவர். அந்த விளையாட்டுதானே?” என்றான் பாலு.
“அதற்கு அசல் பெயர் மொனாப்பலி. அப்படியென்றால் ஏகபோகம் என்று அர்த்தம். எல்லாவற்றையும் ஒருவரே வாங்கி வைத்து அனுபவிப்பது. அந்த விளையாட்டை உருவாக்கியதன் நோக்கமே, வணிக முறைகளை எளிதாக சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத்தான். ஆனால் அது வெறுமே நடைமுறை பற்றிய அறிவைத் தருவதோடு நிற்பதில்லை. பலரை திவாலாக்கி நான் பெரும் பணக்காரனாகவேண்டும் என்ற ஆசைக்கும் தீனி போடுகிறது.” என்றார் மாமா.
“அதற்கு எதிராகவும் ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் தெரியுமா?” என்றது வாலு.
“அதற்குப் பெயர் ஆண்ட்டி மொனாப்பலி (anti-monopoly).மொனாப்பலி விளையாட்டு ஏகபோகம் நல்லது என்ற கருத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லை என்ற கருத்தை உருவாக்குவது ஆண்ட்டி மொனாப்பலி.
முதல் விளையாட்டு முடியும் இடத்தில் இது ஆரம்பிக்கும். ஒருத்தர் ஏகபோகமாக எல்லாவற்றையும் தன்னிடம் வைத்திருப்பார். எப்படி ஒவ்வொன்றாக அவற்றை எல்லாருக்குமானதாக ஆக்குவது என்பதுதான் விளையாட்டின் வழிமுறை.” என்றார் மாமா.
“கிட்னியை உயிருள்ளவரிடமிருந்து விலைக்கு வாங்கப் போகிறேனா, இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறுவேனா என்று ஒருத்தர் முடிவு செய்வதற்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது என்று இப்போது புரிகிறது.”என்றேன்.
“எந்தெந்த விளையாட்டில் என்னென்ன மதிப்பீடு அடங்கி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதப் போகிறேன்” என்றான் பாலு.
“முதலில் கிரிக்கெட்டையும் கால்பந்தையும் எடுத்துக் கொள்.” என்றார் மாமா. இரண்டுமே எங்கள் எல்லாருக்கும் பிடித்த விளையாட்டுகள். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது, தனி மனிதரின் திறமையா, குழுவின் ஒத்துழைக்கும் தன்மையா என்று ஆராயப் போகிறோம்.
வாலுபீடியா 1: உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் கிட்னிகளை கடுமையாகப் பாதிக்கின்றன. வருடத்துக்கு 2 லட்சம் பேர் இந்தியாவில் கிட்னி செயலிழப்பால் இறக்கின்றனர். கிட்னி நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவை சந்திக்க வசதி இல்லை.
வாலுபீடியா 2: மொனாப்பலி விளையாட்டு, 1933ல் உருவாக்கப்பட்டது. 47 மொழிகளில், 114 நாடுகளில் இது விளையாடப்படுகிறது. ஆண்ட்டி மொனாப்பலி, 1973ல் பேராசிரியர் அன்ஸ்பாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

