PUBLISHED ON : மார் 06, 2017

மூன்று வயதில் நீச்சல்குளத்தில் இறங்கியவர் ஜெயவீணா. தேசிய ஜூனியர் அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், நான்கு தங்கப்பதக்கங்கள் பெற்றவர். அதில் மூன்று பதக்கங்கள், தேசிய அளவிலான சாதனைகளுக்குக் கிடைத்தவை. நீச்சலில் புதிய பாய்ச்சலாய் திகழும் இவர், 50 மீட்டர் தூரத்தை 34.43 நொடிகளில் கடக்க விரும்புகிறார். திரைப்பட நடிகர் 'தலைவாசல்' விஜயின் மகள் ஜெயவீணாவிடம் சில கேள்விகள்:
நீச்சலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? படிப்பைவிட நீச்சல் பிடித்திருக்கிறதா?
நீச்சல் தான் எல்லாமே. அதற்காக படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. விளையாட்டுக் கனவையும், படிப்பையும் ஒருங்கிணைக்கும் படிப்பை தேர்வு செய்திருக்கிறேன். இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசன் படித்து வருகிறேன். மூன்று வயதில் அண்ணனோடு நீச்சல் பயிற்சிக்குப் போவேன். தண்ணீரில் விளையாட அடம் பிடிப்பேன். அன்று முதல் இன்று வரை, நீச்சல்குளம் தான் என் முதல் வீடு.
நீச்சல் பயிற்சியால் பள்ளிப் படிப்பு பாதிக்கவில்லையா?
நீச்சல் பயிற்சியில் முழு கவனம் செலுத்தியதால், நேரடியாகப் பள்ளிக்கு சென்று பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ப்ளஸ் 2 தேர்விற்கு இரண்டு மாதம் முன் வீட்டிலேயே ஆசிரியர் வந்து சொல்லிக் கொடுத்தார். கல்லூரியில் நேரடியாக படித்து வருவதால், பள்ளி வாழ்க்கையை மிஸ் செய்திருக்கிறோம் என்று சிலநேரம் நினைப்பதுண்டு, ஆனால் வருத்தமில்லை.
உங்களுடைய ஆதர்சங்கள்?
மைக்கேல் ஃபெல்ப்ஸை தான் மிகவும் பிடிக்கும். வளரவளர தேடல் மாறியது. இப்போது எனக்கு அப்பா தான் முன்மாதிரி. பயிற்சியில் இருக்கும்போது, படிப்பு, தேர்வு பற்றி யோசனை ஏற்பட்டு, பயிற்சியில் கவனம் குறையும். அப்போது அப்பா சொன்னதுதான் இன்றுவரை மறக்க முடியாது. “எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்” என்றார். அந்த வார்த்தைகள் தான் பெரிய உந்துதல்.
தோல்வி ஏற்பட்டால் மனச்சோர்வு வருமா? அதை எப்படி எதிர் கொள்வீர்கள்?
என்னதான் கடுமையாகப் பயிற்சி செய்தாலும், சில விநாடிகளில் தோல்வியும் வரலாம், வெற்றியும் வரலாம். ஒரு சமயம் மாநிலப் போட்டியில் ரெக்கார்ட் செய்தது, மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஊடகங்களில் கூட செய்தி வெளியானது. அந்தச் சமயத்தில், எனக்குள் சின்ன தைரியம் முளைத்துவிட்டது. வெற்றி தலைக்குள் ஏறிவிட்டதா என்று தெரியவில்லை. தேசிய அளவிலான போட்டியில், என் பழைய ரெக்கார்டையே என்னால் திரும்பிச் செய்ய முடியவில்லை.
அந்தத் தருணம் தான் என்னை மிகவும் பாதித்தது. எதனால் தோற்றேன் என ஆராய்ந்தேன். அதன்பின் தவறைச் சரி செய்துகொண்டு தயார்படுத்திக் கொண்டேன். வெற்றியைக் கொண்டாடுவதும், தோல்வியை ஏற்கத் தயங்குவதும் தான் நம்மை முடக்கும். அதனால் இரண்டையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நிதானத்தை கற்றுக்கொண்டேன். நீச்சல் போட்டிகள், எனக்குள் போராட்ட குணத்தை வளர்க்கிறது.
நீச்சல், படிப்பு தாண்டி வேறு ஆர்வங்கள்?
இத்தனை நாளும், நீச்சலும் வீடும் தான் தெரியும். கல்லூரியில் சேர்ந்த பின்னர் தான், நண்பர்கள், வகுப்பறை, வேறுவேறு துறைகளில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள தொடங்கியிருக்கிறேன்.
திருமணத்திற்குப் பின் நீச்சல், ஸ்போர்ட்ஸ் மெடிசன் எல்லாம் என்ன ஆகும்?
இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நான் ஒலிம்பிக்ஸில் விளையாட வேண்டும் என்பதுதான், என் இப்போதைய கனவு. ஸ்போர்ட்ஸ் மெடிசன் துறையில் ஈடுபட்டுக்கொண்டே, புதிய நீச்சல் வீரர்களுக்குப் பயிற்சி
அளிக்கும் திட்டமும் உண்டு. நான் நினைத்தாலும், நீச்சல் என்னைக் கைவிடாது!.

