
மலைகளில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் எப்போதுமே அழகு. அடர்ந்து கிளைபரப்பி ஆயிரம் ரகசியங்களை தம்முள் வைத்திருக்கும். அதே காடு நீருக்குள் நிற்கும் பொழுது கூடுதல் அழகையும், கவனத்தையும் பெறும். அப்படி அழகு பெற்ற காடுதான் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு.
* பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.
* சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய்.
* சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
* அங்கு செல்வதற்கு முன் அந்த இடத்தின் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலம்.
* பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது.
* இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் மாதிரி நீண்டிருக்கும்.
* இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும்.
* பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.
* உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
* பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு
45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும்.
* துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம்.
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு.
* காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன.
* உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

