PUBLISHED ON : டிச 16, 2019

மேலை நாடுகளில் மட்டுமே அருந்தப்பட்ட சூப், இன்று நம் நாட்டின் பெரும் உணவகங்களுக்குள் ஊடுருவிவிட்டது. தற்போது பரவலாக மக்கள் பயன்படுத்தும் சாதாரண உணவுப் பொருளாகிவிட்டது.
அடடா... சைவத்திலும் அசைவத்திலும்தான் எத்தனை வகையான சூப்புகள்! தயாரிக்கும் முறையிலும் பல விதங்கள்! குளிர்காலத்தில் வெதுவெதுப்பான சூப்புகளும், கோடைகாலத்தில் குளிர்ந்த பழ சூப்புகளும் விரும்பி அருந்தப்படுகின்றன. பசியைத் தூண்டுவதற்காக, சூப்பை சாப்பாட்டுக்கு முன் அருந்தும் வழக்கம் இப்போது பிரபலமாகி வருகிறது. எளிதில் செரிக்கக் கூடியதாகவும், ஆரோக்கியம் தருவதாகவும் சூப் இருக்கிறது. இதர உணவுப் பொருட்களைவிட வேகமாக, குறைந்த நேரத்தில் தயாரிக்கவும் முடியும். அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலுக்கு ஏற்றது.
தானியங்கள் நீரில் கொதிக்கும்போது வெளியிடப்பட்டும் மாவுப்பொருளால் சூப்புகளுக்கு ஒருவித கொழகொழப்புத் தன்மை கிடைக்கிறது. இறைச்சியில் இருக்கும் எலும்புகளை வீணாக்காமல் சூப் செய்வதன் மூலம், சுவையான, சத்தான பானங்களையும் கண்டறிந்தனர். அகார்ன் போன்ற தாவரங்களின் காய்களை அப்படியே சாப்பிட முடியாது. இவற்றைச் சூப்பாக செய்தால் சுவையாக இருக்கும்.
ஆமாம்… சூப் என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? பிரெஞ்சு மொழியில், சூபெ (Soupe) என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. இந்த பிரெஞ்சு சொல்லின் மூலம் 'சூப்பா' என்ற லத்தீன் வார்த்தை. இதற்கு, 'திரவத்தில் அமிழ்த்திய ரொட்டி' என்று பொருள்.
முதன் முதலில் பாரிஸ் நகரப் பொது உணவுக்கூடங்களில் சூப், 18ஆம் நூற்றாண்டில் பரிமாறப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் உலக உணவு ஆராய்ச்சியாளர்கள். ஆனால், சமையல் தொடங்கிய காலத்தில் இருந்தே, சூப்புகளும் இருந்திருக்கின்றன. உணவுப் பொருள் பற்றாக்குறையின்போது, கிடைத்த தானியங்களை நீரில் இட்டுக் கொதிக்கவைத்து மக்கள் அருந்தினார்கள். அது வயிற்றை நிறைத்தது. அப்படிப் பார்த்தால், நம்ம ஊர் கஞ்சிகூட ஒரு வகையில் சூப்தான்!
கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சூப் சாப்பிட்டவர்கள்தான். களிமண் தடவிய மூங்கில்கள், ஊர்வனவற்றின் ஓடுகள், தாங்கள் வேட்டையாடிய மிருகங்களின் வயிறு போன்றவற்றில் மாமிசத்தை இட்டுக் கொதிக்கவைத்து, சூப் போல அருந்தினர்.
சூப் செய்வதற்கான பாத்திரங்கள் கிடைக்காதபோது, சில வழிமுறைகளைக் கையாண்டனர். நிலத்தில் குழி தோண்டி, அதன் பக்கங்களில் இன்சுலேஷன் செய்வதுபோல மிருகத்தோலைப் பதித்தனர். பின்னர், அதில் நீரை நிரப்பிச் சுடுகற்களைப் போட்டுக் கொதிக்கவைத்து அருந்தியிருக்கிறார்கள்.
ஈராக்கில் கிடைத்த, 46,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதப் பல் ஒன்றின் படிமத்தில் சமைக்கப்பட்ட ஸ்டார்ச் தானியம் இருந்திருக்கிறது! அது சூப்பின் மிச்சமாயிருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- மாதப்பன்
