PUBLISHED ON : ஜூலை 01, 2019

ஆவியாதல், மேகம் உருவாதல், மேகத்துக்கு உள்ளே நீர்த் திவலைகள் திரண்டு மழைத்துளி உருவாதல் ஆகிய இந்த மூன்றும் சேர்ந்ததே மழை எனப்படுகிறது.
இந்த மூன்றில் மேகத்துக்கு உள்ளே நீர்த் திவலைகளைத் திரளச் செய்வதை மட்டுமே நாம் செயற்கையாகச் செய்கிறோம். இதனால், செயற்கையாக மேகத்தைத் தூண்டுவதே செயற்கை மழை எனப்படுகிறது.
நீராவி, செறிவாக உள்ள மேகம் இருந்தால் மட்டுமே செயற்கை மழையைப் பொழிவிக்க முடியும். மேகத்தின் மீது 'சில்வர் அயோடைடு' நுண்துகள் அல்லது உலர்பனித் துகள்களைத் தூவும்போது, அவை நுண்பனித் துளிகளை உருவாக்கும்.
சில்வர் அயோடைடு படிகத்தின் வடிவம், பனியின் படிக வடிவம் போல இருப்பதால், அதில் நீர் நுண் திவலைகள் படிந்து வளரும். இதன் விளைவாக, நீர்த் துளிகள் திரட்சிபெற்று, மழை பொழியும்.
கூடுதல் மழைநீர்!
ஓராண்டில் உலகம் முழுவதும் சுமார் நூறு செ.மீ. (5,360 கோடி கோடி லிட்டர்) மழை பொழிகிறது. செயற்கை மழை மூலம், இந்த மொத்த மழையின் அளவைக் கணிசமாகக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.
மேகமாக உருவாகும் நீர்த் திவலைகள் வெறும் ஒன்பது நாட்கள் மட்டுமே காற்றில் மிதக்கும். அதன் பின்னர் எங்காவது மழையாகப் பொழிந்துவிடும்.
எனவே, ஏதோ ஒரு மேகத்தைச் செயற்கையாக நாம் விரும்பும் இடத்தில் பொழிய வைப்பது என்பது, வேறு எங்கோ பொழிய வேண்டிய மழையை, நாம் இங்கே பொழிய வைக்கிறோம் என்பதே பொருள்.
ஆய்வுகள் கூறுவது...
மழை பொழிவதைக் கோட்பாட்டு ரீதியாக அறிந்த ஆய்வாளர் லூயிஸ் கத்மான் (Louis Gathmann), 1891இல் கார்பன் டை ஆக்சைடை, மேகத்துக்குள் வீசி செயற்கை மழையைத் தூண்டலாம் என்றார். ஆனால், 1940க்குப் பிறகே செயற்கை மழை பொழிய அமெரிக்காவில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேகத்தில் வேதிப் பொருட்களைத் தூவிய அதேசமயம் மழை பொழிந்தது எனில், செயற்கை மழை முயற்சி வெற்றி அடைந்தது என கூறமுடியாது.
எல்லா மேகமும் ஒரு நாள் மழையாகப் பொழியும். வேதிப்பொருளைத் தூவியதால்தான் மழை பொழிந்தது என உறுதி செய்வது கடினம்.
பொழியும் மழைத் துளிகளில் எவ்வளவு சில்வர் அயோடைடு உள்ளது என்பதை வைத்தே அதை முடிவு செய்யலாம். மேகங்கள், தன்னுள் உள்ள எல்லா நீரையும் மழையாகப் பொழிந்து விடுவதில்லை. மேகத்தின் மழைப் பொழிவுத் திறனை அதிகரிக்கும் முயற்சி குறித்த ஆய்வுகளும் உறுதியான நம்பிக்கையைத் தரவில்லை.
பயன்கள்
தீவிர நீர்த் தட்டுப்பாடு மற்றும் வறட்சி ஏற்படும் போது, செயற்கை மழை, தீர்வாக முன் வைக்கப் படுகிறது. அறிவியல்பூர்வமாக தற்காலிகச் சிக்கலைத் தீர்க்கும் விதமாகவே இது கருதப்படுகிறது. எனினும் சில சிறப்புத் தருணங்களில் செயற்கை மழை பயன் தரலாம்.
எடுத்துக்காட்டாக, டில்லியில் அளவு கடந்த காற்று மாசு ஏற்பட்டபோது, செயற்கை மழை மூலம் அந்தத் தூசுகளை அகற்றிக் காற்றைச் சுத்திகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல சீனா, பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியின்போது, மழை குறுக்கிடாமல் இருக்க, செயற்கை மழையைத் தூண்டி, நகரின் மீது மழை பொழியாமல் தடுத்துவிட்டனர் என கூறப்படுகிறது.
பாதிப்பு
சில்வர் அயோடைடு போன்ற பல வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும், பயன்படுத்தும் அளவு மிகமிகக் குறைவு. காற்றில் ஏற்கெனவே உள்ள மாசை ஒப்பிடும்போது, இதனால் மாசு ஆபத்து இல்லை என்கிறார்கள்.
