PUBLISHED ON : ஜன 23, 2017

“ஏன் வருஷத்துல ரெண்டு தடவை சுதந்திரத்தைக் கொண்டாடறோம்? எனக்குப் புரியல” என்றான் பாலு.
“தினமுமே கொண்டாடவேண்டியது தான்னு சொல்றியா? எனக்கும் அப்படிதான் தோணுது.” என்றேன். “நான் அதைச் சொல்லலே. ஒரே மேட்டரை ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ரெண்டு நாள் ஏன் கொண்டாடணும்?” என்றான் பாலு.
“ரெண்டும் ஒரே மேட்டர் இல்ல பாலு. வெவ்வேற.” என்றார் ஞாநி மாமா. “ஆகஸ்ட் 15, 1947 அன்னிக்கு பிரிட்டிஷ்காரங்க, நம்ம கிட்ட ஆட்சியை ஒப்படைச்சாங்க. அதுதான் சுதந்திர தினம். ஜனவரி 26, 1950ல நம்மை நாமே எப்படி ஆளுவதுங்கறதுக்கான சட்டத்தை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தோம். அது குடியரசு நாள்.” என்றார் மாமா.
“சட்டத்தை உருவாக்க மூணு வருஷமா?” என்றான் பாலு.
“உலகத்துலயே நீளமான அரசியல் சட்டம் நம்மோடதுதான். மொத்தம் 80 ஆயிரம் சொற்கள். ஒவ்வொரு சொல்லும் முக்கியம்.” என்றார் மாமா.
மொத்தம் 389 மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து இந்திய அரசியல் சட்டத்தை நிறைவேற்றினார்களாம். எனக்கு ஒரு சந்தேகம். யார் அவங்க? முதல் தேர்தலே 1952லதான் நடந்துச்சு. அப்ப இவங்க அதுல ஜெயிச்ச எம்.பிகளா இருக்க முடியாது.
மாமா விளக்கினார். சுதந்திரம் வருவதற்கு சுமார் ஒரு வருடம் முன்னால், 1946ல் இந்தியா முழுக்க வெவ்வேற மாநிலங்கள்ல தேர்தல் நடத்தியிருக்காங்க. அதுல ஜெயிச்சவங்கள்லருந்து கொஞ்சம் பேரை தேர்ந்தெடுத்து அரசியல் சட்ட நிர்ணய சபைன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. அதோட ஒரே வேலை புது அரசியல் சட்டத்தை உருவாக்கறதுதான். அந்த சபைதான் சட்டத்தை எழுத டாக்டர் அம்பேத்கர் தலைமையில ஒரு குழுவை நியமிச்சிருக்கு.
“யார்லாம் அதுல இருந்தாங்க?” என்றான் பாலு. கோவிந்த் வல்லப பந்த், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி, கோபால்சாமி, சாதுல்லா, மிட்டர்,நரசிங்கராவ், கைத்தான், டி.டி.கிருஷ்ணமாச்சாரின்னு எல்லாரும் பெரிய பதவிகள்ல இருந்தவங்க. நரசிங்கராவ் பின்னால உலக நீதிமன்றத்துலயே நீதிபதியா நியமிக்கப்பட்ட முதல் இந்தியராம். இவங்க எல்லாரும் சேர்ந்து அம்பேத்கர் தலைமையில் ரெண்டே மாசத்துல அரசியல் சட்டத்தை எழுதிட்டாங்க. அதை சபை ரெண்டு வருஷத்துக்கு மேலத் துருவித் துருவி விவாதிச்சது. மொத்தம் 7,635 திருத்தங்கள் சொன்னாங்க. கடைசியில எல்லாரும் ஏத்துகிட்டது 2,463 திருத்தம்.
“இதுக்கு எவ்வளவு பணம் செலவாயிருக்கு தெரியுமா?” என்றது வாலு. 1950ல ஒரு கோடி ரூபாயாம். இன்னிய மதிப்புல 100 கோடி சொல்லலாம். அடுத்த 60 வருடத்துல அரசியல் சட்டத்துல நூறு திருத்தம் செஞ்சிருக்கோம்.
“ரெண்டே மாசத்துல எழுதினாங் களே? எதை அடிப்படையா வெச்சு எழுதியிருப்பாங்க?” என்று கேட்டேன்.
பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா,சோவியத் யூனியன்னு பத்து நாடுகளுடைய அரசியல் சட்டத்தையும் எடுத்துப் படிச்சு அதுலருந்து நமக்குப் பொருத்தமானதை எடுத்துகிட்டிருக்காங்க. இன்னிக்கு நமக்கு இருக்கற எல்லா உரிமையும் அரசியல் சட்டத்துலருந்து நமக்குக் கிடைச்சதுதான். படிக்கற உரிமை, வேலை பார்க்கற உரிமை, பேசற, எழுதற உரிமை எல்லாமே.
அது மட்டும் இல்ல , உலகத்துலயே உரிமையைப் பத்தி மட்டும் பேசாம, குடிமக்களோட கடமையைப் பத்தியும் சொல்ற சட்டம் நம்மோடது. இந்த ஐடியாவை சோவியத் யூனியன் சட்டத்துலருந்து எடுத்துகிட்டிருக்காங்க.
“என்னென்ன கடமை?” என்று கேட்டான் பாலு. “வாலுபீடியால போய் பாரு” என்றது வாலு.
“இவ்வளவு சிறப்பான சட்டத்தை சபை நிறைவேற்றின நாள் நவம்பர் 1949. அதை அரசியல் சட்ட தினமா கொண்டாடுகிறோம். அந்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26. அதைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்”என்றார் மாமா.
“அன்னிக்கு செங்கோட்டையில பிரதமர் கொடி ஏத்துவார் இல்லியா?” என்றேன். ஆமென்றார் மாமா. உடனே பாலு
“பிரதமர்தான் கொடி ஏத்தணும்னு அரசியல் சட்டத்துலயே எழுதி வெச்சிருக்குதா?” என்று கேட்டான். “இதெல்லாம் சட்டத்துல இருக்காது. சட்டத்தின் கீழ் அரசு போடற விதிகள்ல இருக்கும்” என்றார் மாமா.
“ஒவ்வொரு வருஷமும் எங்களை மாதிரி சிறுவர்களை தேர்ந்தெடுத்து கொடி ஏத்த சொல்லலாம் இல்லியா?” என்றான் பாலு. “நல்ல ஐடியாதான். பிரதமருக்குக் கடிதம் எழுது. ஒருவேளை அடுத்த வருஷம் நடந்தாலும் நடக்கும்.”என்றார் மாமா.
“அப்படி உன்னைக் கூப்பிட்டா, பிரதமருக்கு மாலை போடாதே. ஆபத்து” என்றது வாலு என்னிடம் சிரித்துக் கொண்டே. ஏன் என்று கேட்டேன்.
நேரு மாமா பிரதமராக இருந்தபோது 1959ல் இப்போதைய ஜார்கண்டில் இருக்கும் பஞ்செட் அணைக்கட்டின் மின் நிலையத்தை திறக்கப் போனாராம். அவர் திறக்காமல் அங்கே பணி புரிந்த சந்தால் பழங்குடிப் பெண் 15 வயது சிறுமி புத்னியை திறக்கச் சொன்னாராம். புத்னி அப்போது அவருக்கு மாலை அணிவித்திருக்கிறார். அதன்பின்னர் தன் கிராமத்துக்கு புத்னி சென்றபோது, அவர் நேருவுக்கு மாலை அணிவித்ததால் அவருக்கும் நேருவுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக அர்த்தம் என்று பழங்குடி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்.பின்னால் சுமார் இருபது வருடம் கழித்து புத்னி ராஜீவ் காந்தியை சந்தித்து எல்லா கதையையும் சொன்னதும் திரும்ப வேலையில் சேர்க்க சொல்லியிருக்கிறார். கடைசி வரை அவரை கிராமத்துக்குள் சேர்க்கவே இல்லை.
“எனக்குப் பிரச்னையே இல்லை. நான்தான் மாலை, சால்வை எதையும் ஏற்றுக் கொள்வதே இல்லையே. நினைவுப் பரிசாகக் கொடுத்தால் புத்தகம்தான் தரவேண்டும்.” என்றேன்.
''உனக்கும் பாலுவுக்கும் 26ந் தேதி அரசியல் சட்டப் புத்தகத்தை பரிசாகத் தருகிறேன்.” என்றார் மாமா. “ஏன் அடுத்த வாரம்? இன்றே வாங்கலாமே.” என்றேன். “தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. புத்தகக்காட்சிக்குப் போய் தேடுவேன்” என்றார்.
“அப்ப அதையும் பெரியவனாகி நான்தான் மொழிபெயர்க்கணுமா?” என்று சிணுங்கினான் பாலு. எல்லாரும் சிரித்தோம்.
வாலுபீடியா 1: இந்திய அரசியல் சட்டத்துக்கான முதல் திருத்தம் 1951ல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் கொண்டு வரப்பட்டது. இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக செய்யப்பட்ட திருத்தம் இது.
வாலுபீடியா 2: அரசியல் சட்டப் பிரிவு 51 ஏ சொல்லும் குடிமக்கள் கடமைகள்
அ) அரசியல் சட்டத்தின்படி நடந்துகொண்டு அதன் லட்சியங்கள், அமைப்புகள், தேசியக் கொடி, நாட்டுப்பண் ஆகியவற்றை மதிக்கவேண்டும்.
ஆ) விடுதலைப் போராட்டத்துக்கு உந்துதலாக இருந்த கொள்கைகளைப் போற்றி பின்பற்றவேண்டும்.
இ) இந்தியாவின் ஒருமைப்பாடு, ஐக்கியம், இறையாண்மை ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கவேண்டும்.
ஈ) நாட்டைப் பாதுகாக்கவும், அழைக்கப்பட்டால் தேச சேவைக்கு வரவும் வேண்டும்.
உ) மதம், மொழி, வட்டாரம், பிரிவு ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுடனும் இயல்பாகவும் சகோதரத்துவத்துடனும் இருப்பதை ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் கண்ணியத்துக்கு இழிவு செய்யும் செயல்களைக் கைவிடவேண்டும்.
ஊ) நமது பல்வகை கலாசாரத்தின் செழுமையான மரபைப் பாதுகாத்துப் போற்றவேண்டும்.
எ) காடுகள், ஏரிகள், நதிகள், கானுயிர் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். வாழும் உயிர்கள் அனைத்திடமும் அன்பு காட்டவேண்டும்.
ஏ) அறிவியல் நோக்கு, மனிதநேயம், எதையும் துருவி அறியும் பார்வை, சீர்திருத்தம் ஆகியவற்றை பின்பற்றி மேம்படுத்த வேண்டும்.
ஐ) பொதுச் சொத்தைப் பாதுகாத்து வன்முறையைத் தவிர்க்கவேண்டும்.
ஒ) தனிப்பட்ட செயல்களிலும் கூட்டு நடவடிக்கைகளிலும் உச்சமான திறமையை அடைய முயற்சித்து நாடு பெரும் சாதனைகளை எட்ட பாடுபடவேண்டும்.

