
வண்ணாத்திக்குருவி
ஆங்கிலப் பெயர்: 'ஓரியண்டல் மேக்பி ராபின்' (Oriental Magpie Robin)
உயிரியல் பெயர்: 'காப்சிகஸ் சாலாரிஸ்' ( Copsychus Saularis)
வேறு பெயர்கள்: கறுப்பு வெள்ளைக்குருவி, குண்டுக்கரிச்சான்
'மஸ்கிகேபிடே' (Muscicapidae) குடும்பத்தைச் சேர்ந்த பாடும் குருவி. ஆண் குருவியின் உடல் மேற்புறம் கருமை நிறத்திலும், சிறகுகள், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெண் குருவிகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். இவை, காடுகள், தோட்டங்களில் பரவலாகத் தென்படுகின்றன. இலை, செடிகளுக்கு இடையே இருக்கும் சிறு பூச்சி, புழுக்கள் இவற்றின் உணவு. மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவரில் உள்ள பொந்துகளிலோ கூடு அமைக்கும். காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன தட்டை மேடை இதன் கூடு.
அழகாகப் பாடும். பாடும்போது வால் பகுதியை உயர்த்தி அசைத்தபடி காணப்படும். பாடுவதன் மூலம் தன்னுடைய எல்லையைப் பிற பறவைகளுக்குத் தெரியப்படுத்தும். இனப்பெருக்கக் காலத்தில் வித்தியாசமான குரலில் பாடும். மார்ச் முதல் ஜூலை வரை இவற்றின் இனப்பெருக்கக் காலம். ஆறு முட்டைகள் வரை இடும்.
முட்டை, செம்புள்ளிகளுடன், நீல நிறத்தில் சிறியதாக இருக்கும். குஞ்சுகள் வெளிவந்த பிறகு, தாய், தந்தை இரு பறவைகளும் அவற்றைப் பாதுகாக்கும். புழு, பூச்சிகளைக் கொண்டுவந்து ஊட்டும். ஆசியா முழுவதும் இந்தக் குருவிகள் பரவலாகக் காணப்படுகின்றன. தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை உண்பதன் மூலம் இவை பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. 'வண்ணாத்திக் குருவி' வங்க தேசத்தின் தேசியப் பறவை. வங்க மொழியில் இதன் பெயர் 'டோயல்' (Doyel)
- கி.சாந்தா

