PUBLISHED ON : செப் 26, 2016

தலைப்பைப் படித்தால் சிரிப்பாக இருக்கிறதுதானே! பறவைகளுக்குப் பற்கள் கிடையாது. ஆனால் அவை எப்படி உண்கின்றன என்று யோசித்திருக்கிறோமா? விதைகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை பறவைகள் உண்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? பறவைகளுக்கு வயிற்றின் கீழ்ப்பகுதியில் 'கிஸார்ட்' (Gizzard) என்ற அரவைப் பகுதி உள்ளது. தடிமனான தசைகளைக் கொண்ட 'கிஸார்ட்' பகுதியில் கடினமான செதில்களும், பற்கள் போன்ற தசை நார்களும் இருக்கின்றன. பறவைகள் உண்கிற உணவை அரைத்துக் கூழாக்குவதே இதன் வேலை! பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்கள், மணற்துகள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி உணவை உடைத்து செரிமானத்திற்கு தயார் ஆக்குகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை இந்தக் கற்களை கழிவாகக் கழித்துவிட்டு, மீண்டும் புதிய கற்களை உணவுடன் எடுத்துக் கொள்கின்றன. பல் இல்லாமலே சாப்பிடுகிற பறவைகள் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று!
