PUBLISHED ON : ஏப் 10, 2017

நாமெல்லாம் சிங்கம், புலி, கரடியை வனவிலங்கு காட்சியகங்களுக்குப் போய் ரசிக்கிற கோஷ்டி. வனங்களுக்கே சென்று, அங்கேயே கரைந்துபோவது இன்னொரு கோஷ்டி. சூர்யா, இதில் இரண்டாவது வகை.
புலிகள் காப்பகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு, இயற்கையியலாளராக உருவாகியிருக்கும் இளைஞர் 'வைல்ட்லைஃப் போட்டோகிராபர்' சூர்யா. தான் பார்த்து, உணர்ந்த காடுகளின் வாழ்க்கை குறித்து, வழிகாட்டி நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார் சூர்யா. Photographic field guide: wildlife of central India என்ற அவரின் நூல், பலரின் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவரின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
“சிட்டியில வளர்ந்தாலும், வீட்டுல, ஸ்கூல்ல வனவிலங்கு பூங்காக்களுக்கு கூட்டிட்டு போவாங்க. அது பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. வழக்கமா, எல்லார் வீட்லையும் சொல்ற மாதிரி எங்க வீட்லையும் இன்ஜினீயரிங் படிக்கணும்னுதான் சொன்னாங்க.
ஆனா, மத்தவங்க வீட்டுக்கும், எங்க வீட்டுக்கும் சின்ன வித்தியாசம். என்னவேணாலும் பண்ணு, ஆனா டிகிரியை முடிச்சுட்டு பண்ணுன்னு சொன்னாங்க. கல்லூரி வாழ்க்கை நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. நான் என்ன பண்ணனுங்கிற தெளிவே எனக்கு அப்போதான் கிடைச்சது.
படிச்சு முடிச்ச பின்னால, தனியார் தொலைக்காட்சி ஒண்ணுல வனவிலங்கு ஆவணப்படங்கள் எடுக்கும் வேலை கிடைச்சது. அங்க அதோட நிகழ்ச்சி பொறுப்பாளர் பாலகைலாசத்தை சந்திச்சேன். டிஸ்கவரி, நேட் ஜியோ மாதிரியான சேனல்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அதனால அவர் சொல்லிக்கொடுத்த தொழில்நுட்ப விஷயங்கள் எனக்கு எளிமையா புரிஞ்சது.கேமராவை தூக்கிட்டு காட்டுக்குப் போயிட்டேன். காடுகளுக்கு போகும்போது என்ன செய்றாங்க, எப்படி பேசணும், திட்டம் வகுப்பது போன்ற விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஏராளமான புகைப்படங்களை எடுத்துத் தள்ளினேன்.
ஒருகட்டத்துல போட்டோ எடுக்கிறதை விட இயற்கையை ரசிக்கத் தொடங்கிட்டேன். அதுக்கு அப்புறம் எடுத்த படங்கள் வேற கோணத்துல இருந்துச்சுன்னுதான் சொல்லணும். என்னோட கனவை ஒழுங்குபடுத்தி கொடுத்ததில் பாலகைலாசத்துக்கு பங்கிருக்கு.
வேலையை விட்டுட்டு காடுகளுக்கு போகணும், இயற்கையோட இணைஞ்சு ஏதாவது பண்ணனும்னு தோண ஆரம்பிச்சது. வனவிலங்குகளை படமா எடுத்து ஆவணப்படுத்தினா மட்டும் போதுமான்னு யோசிக்க ஆரம்பிச்சேன். எங்களுக்கு உதவக்கூடிய, பின்னாடி இருந்து செயல்படக்கூடிய இயற்கையியலாளர்களோட பணிதான் பிரமிக்க வச்சது.
இன்னிக்கு நம்ம ஊர்ல நிறையப் பேர் காடுகளை சுத்திப் பார்க்க விரும்பி வராங்க. அவங்களுக்கு காடுகளை சுத்தி காமிக்கிறது, விலங்குகளோட நடமாட்டம் எங்க இருக்கும், எங்க பார்க்க முடியும், எவையெல்லாம் புதுப்புது பறவைகள் அப்படின்னு இயற்கையின் கதைசொல்லியா நான் மாறுவதற்கு இயற்கையியலாளர்கள்தான் காரணம்.
குறிப்பா வேலையைவிட்ட சமயத்துல சத்புரா என்ற சரணாலயத்துல பயிற்சிக்கு சேர்ந்தேன். அதுதான் என்னோட வாழ்க்கையில ஒரு திருப்புமுனை.
காட்டுக்குள்ள இருந்து, என்னோட திறமையை வளர்த்துக்கிட்டேன். ஏன்னா வெறும் புலி, கரடி, மான், யானை இது மட்டுமே காடு கிடையாது. அதைத்தாண்டி மக்களுக்கு தெரிஞ்சுக்க நிறைய விஷயங்கள் இருக்கு. சத்புரா சரணாலயத்துல எனக்கு சரியான வழிகாட்டி அமைஞ்சாங்க. காட்டை சுத்திப் பாக்க வர்ற மக்களுக்கு கதை, விளையாட்டு மூலமா காட்டைப் பத்தி சொல்றதுன்னு நான் நினைச்சதை விட காட்டு வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருக்கு.
எனக்கு கிடைச்ச அனுபவத்தை ஆவணப் படுத்தணும்னு யோசிச்சப்ப, எழுதலாம்ன்னு தோணிச்சு. காட்டுக்கு வர ஆசைப்படறவங்களுக்கு இவற்றையெல்லாம் காட்சியா மட்டும் சொல்லாம, ஒரு சின்ன வழிகாட்டி நூல் மூலமா சொன்னா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். அதத்தான் நானும் என் நண்பரும் சேர்ந்து ஒரு புத்தகமா எழுதினோம்.
எனக்கு பிடிச்சதை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதுமாதிரி வேலைக்கு வரணுன்னா என்ன செய்யணும்னு கேட்பாங்க. என்னோட அனுபவத்துல சொல்ற ஒரே விஷயம். இது வேலை இல்லை, வாழ்க்கை. இதுக்கு திறன்களை மட்டும் வளர்த்துக்கிட்டா போதாது, நிறைய ஆர்வம் இருக்கணும், இயற்கையை நேசிக்கணும். பொறுமை வேணும். வழக்கமான எதிர்பார்ப்புகள் இங்கே செல்லுபடியாகாது. இது ஒரு தவம். வனத்தை ரசிக்கும், புரிந்துகொள்ளும், உணர்ந்துகொள்ளும் தவம். ஒவ்வொரு நாளும் வனம் தன் வசீகரத்தைத் திறந்து காண்பிக்கும். வனத்தைத் தேடி வந்த நான், என்னுள்ளே வனத்தைச் சுமந்துகிட்டு இருக்கேன்.”
