தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குரல் எழுப்புவோம்!

குரல் எழுப்புவோம்!

குரல் எழுப்புவோம்!


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“என்ன செய்கிறாய் பாலு?'' என்று கேட்டார் ஞாநி மாமா. அவருக்கு எப்பவுமே கரகரப்பான குரல். “வாய்ஸ் எக்சர்சைஸ்” என்றான் பாலு. “என்ன திடீரென்று?” என்றேன். “இந்த வாரம் உலக குரல் தினக் கொண்டாட்டம் வருகிறது. அதற்கு ஒரு பாட்டு பாடப் போகிறேன். குரலைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.” என்றான் பாலு.

“பாடுவதற்கு ஏற்ற இனிமையான குரல் இல்லாதவர்கள் எல்லாம் குரல் தினம் கொண்டாடுகிறீர்களா? எனக்கு சிரிப்புதான் வருகிறது.” என்றேன்.

“குரல் இருக்கும் எல்லாரும் குரல் தினம் கொண்டாடலாம்” என்றான் பாலு.

“குரலை அதிகம் பயன்படுத்துபவர்கள், நிச்சயம் குரல் தினத்தைக் கொண்டாடவேண்டும்” என்றார் மாமா. யாரெல்லாம் குரலை அதிகம் பயன்படுத்துகிறார்கள்? பாடகர்கள், பேச்சாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சி வழங்குபவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டேன்.

“டாக்டர்களுக்குக்கூட குரல்வளம் வேண்டும். நோயாளிகளிடம் பேசும்போது, பல டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியாது.” என்றார் மாமா. “அவங்க கையெழுத்து மாதிரியா?” என்று சிரித்தது வாலு.

தொண்டையில் இருக்கும் ஒலிப்பெட்டி, அதன் தசை நார்கள் அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருந்தால்தான் குரல் நன்றாக இருக்கும். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிடுவாராம். ஜில் தண்ணி குடிப்பாராம்.

“தொண்டையில் இருக்கும் டான்சில் எனப்படும், அடிநாசுரப்பியில் தொற்று ஏற்பட்டால், அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சைக்குப் பின் முதலில் ஐஸ் க்ரீம்தான் சாப்பிடச் செய்வார்கள். உறுத்தாமல் சாப்பிட வசதியானது. அதன் ஜில்லிப்பு வலி தெரியாமல் செய்யும். அதற்காக ஜில்லிப்பு உள்ளவற்றை நிறைய சாப்பிட்டால், ஒலிப்பெட்டியின் தசை நார்கள் சுருங்கிவிடும். குரல் சரியாக வெளியே வராது. பால், காபி, டீ போன்றவையும் குரலுக்கு நல்லதல்ல. நெஞ்சு சளி அதிகமாகி குரலை பாதிக்கும். காபி, குரல்வளையை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்ததாக்கி விடும். பொதுவாக நல்ல குரல் வளத்துக்கு, ஜில் தண்ணீர், சுடு தண்ணீர் இரண்டும் தேவையில்லை. அறை வெப்பத்தில் இருக்கும் சாதாரண தண்ணீரில் தொண்டையை நனைத்துக் கொண்டால் போதும்.” என்றார் மாமா.

பாடகர்களோ, அரசியல்வாதிகளோ ஒருநாளில் ஒரு முறையோ, இரு முறையோதான் குரலை அதிகம் பயன்படுத்தப் போகிறார்கள். ஆனால் பாவம், நம் டீச்சர்கள். நாள் முழுக்க நம்முடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஓவராக குரலை பயன்படுத்தி சீரழித்தால், தொண்டையில் ஒலி நாண்களில் முடிச்சுகள் உருவாகிவிடுமாம். அதைச் சரிசெய்யாவிட்டால், மெல்ல மெல்ல குரலே கம்மலாகிப் போய்விடுமாம்.

பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கு, குரல் போய்விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். கலைஞர் கருணாநிதிதான் எனக்கு நினைவுக்கு வந்தார். எழுபது ஆண்டுகளாக அவர், மாதா மாதம் ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தவர். இப்போது உடல்நலம் சரியில்லாததால், குரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி படித்தேன்.

“அவருக்கு முதுமையால் பாதிப்பு. சின்ன வயசிலேயே குரலை இழந்து மீண்டும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். புகழ்பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாட்டைப் பாடிய மின்மினிக்கு 23வது வயதில் குரல் போய்விட்டது. சில ஆண்டுகள் அவருக்குப் பேசக கூட வரவில்லை. பிறகு தொடர்ந்து பயிற்சி செய்து, இப்போது மீண்டும் பாடுகிறார்.” என்றார் மாமா.

“நல்ல பாட்டை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், எனக்கு உடம்பு லேசாகிவிடுகிறது. அப்படியே ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கிறது.” என்றான் பாலு. “ஆகாயத்தில் மிதப்பதற்கு இவ்வளவு எளிமையான வழி இருக்கிறதென்றால், விண்வெளிக்கு நாம் ராக்கெட்டெல்லாம் அனுப்பவே தேவையில்லையே.” என்று சிரித்தேன்.

“விண்வெளிக்குப் போக நிச்சயம் ராக்கெட் வேண்டும். ஆனால் விண்வெளிக்குப் போனாலும் கூட மனிதனுக்கு அங்கேயும் பாட்டு வேண்டும். முதன்முதலில் விண்வெளிக்கு ஏப்ரல் 12, 1961ல் சென்ற ரஷ்ய சோவியத் பைலட் யூரி காகரின், விண்கலத்தில் தன் தாய்நாடு பற்றி ஒரு பாட்டுப் பாடினார் தெரியுமா?” என்றார் மாமா. அதுமட்டுமில்லையாம். 1984ல் இருந்து விண்வெளியில் இருக்கும் ஆய்வு நிலையத்துக்கு செல்லும் அமெரிக்க வீரர்கள் கிடார், சாக்சபோன், புல்லாங்குழல் என்று, இசைக் கருவிகளையெல்லாம் எடுத்துப் போய் அங்கே பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்களாம்.

“குரலை வைத்துக்கொண்டு, மனிதன் உச்சமாக என்ன செய்யமுடியும் என்பதன் அடையாளம்தான் மொழியும் பாட்டும். தனியே பாடினால் போதாது. ஆயிரம் பேரோடு சேர்ந்து பாடுவது என்பதை, மறைந்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் சென்னையிலேயே பல்கலைக்கழக அரங்கில் சிறுவர்களைக் கொண்டு செய்து காட்டியிருக்கிறார். எனவே பாலு, நீ உலக குரல் தினத்துக்கு தனியே பாடாமல், நண்பர்களுடன் சேர்ந்திசை வழங்க முடியுமா என்று முயற்சி.” என்றார் மாமா.

“இதே வாரம் இன்னொரு குரல் தினமும் இருக்கிறது” என்றது வாலு. அதெப்படி என்றேன். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அறிஞர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் ஒரு குரல் தினம்தான் என்றது வாலு. “ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்பியது அவர்தானே!” என்றது.

குரல் கொடுப்பது என்பதற்கு, நம் மொழியில் எவ்வளவு அழகாக இன்னொரு அர்த்தமும் இருக்கிறது! இரண்டு குரலையும் நாம் பாதுகாக்க வேண்டும். தொண்டையில் இருந்து வரும் குரல். மண்டையிலிருந்து வரும் குரல்!

வாலுபீடியா 1:

உலக குரல் தினம்: ஏப்ரல் 16

உலக மனித விண்வெளிப் பயண தினம்: ஏப்ரல் 12

அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14

வாலுபீடியா 2

ஆசிரியருடைய குரல் சரியாக இல்லையென்றால், கேட்கும் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கப்படுவதாக இரண்டு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

வாலுபீடியா 3

குரலைப் பராமரிக்க சில பயிற்சிகள்

1. கன்னங்களை இருபக்கமும் கைகளால் அழுத்திக்கொண்டு வாயைத் திறந்து “ஆ”, “ஊ” “ம்” “புர்ர்” என்ற ஒலிகளை தொடர்ந்து எழுப்புங்கள்.

2. நாக்கை எவ்வளவு வெளியே நீட்டமுடியுமோ நீட்டி அதை எல்லா பக்கமும் சுழற்ற வேண்டும்.

3. வாயை நன்கு திறந்து பல முறை கொட்டாவி விட வேண்டும்.

4. மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். மூச்சை வெளியே விடும்போது குரல் ஒலிகளை எழுப்பவேண்டும்.

5. இளம் சூடான வெந்நீரில் தேன் கலந்து பருகவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us