PUBLISHED ON : செப் 02, 2019
மிகவும் வறட்சியான கோடைக் காலங்களில், வறண்ட மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது காற்று வீசினால் மளமளவென, காட்டுத் தீ பரவ ஆரம்பித்துவிடும்.
காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் விவசாய நிலங்களில் உழவு வேலைகள் செய்வதற்கு முன்பாக, தங்கள் விளை நிலங்களில் தீப்பற்ற வைப்பார்கள். அப்போது பற்றவைக்கப்படும் நெருப்பு, காட்டுக்குள் நுழைந்து பெருந் தீயாக மாற வாய்ப்புண்டு.
ஆடு மாடு மேய்ப்பவர்கள், கோடையில் வன நிலங்களில் தீ வைப்பதும் உண்டு. அப்படித் தீ வைக்கப்பட்ட இடங்களில், அடுத்து மழைபொழியும்போது, புற்கள் நன்கு வளரும். அதற்காக இப்படிச் செய்வார்கள். அதுவும் வனத் தீ பரவக் காரணமாகிவிடும்.
வனத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் அணைக்காமல் போட்டுவிடும் பீடி, சிகரெட்டுகள் வனத்தீ ஏற்பட இன்னும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
சில சுற்றுலா பயணிகள் இயற்கைச் சூழலில் சமைத்துச் சாப்பிட விரும்புவார்கள். அப்படிப்பட்ட அன்பர்கள் அடுப்பு மூட்டும்போதுகூட தீ பரவக்கூடும்.
வனத்தை ஒட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், இரயில் போன்றவற்றில் இருந்து கிளம்பும் நெருப்புப் பொறி பெருந்தீயாய் மாற வாய்ப்புண்டு.
காட்டுக்கு அருகில் சாலைகள் போடுவதற்காகச் சில சமயம் தாரைச் சூடு செய்வார்கள். அதிலிருந்தும் காட்டுத் தீ ஏற்படலாம்.
மலைவாசிகள், இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்யும்போது கிளம்பும் தீப் பொறி, சில சமயம் காட்டுத் தீயாக மாறிவிடும்.
காட்டின் ஊடாக நட்டுவைத்திருக்கும் மின்சாரக் கம்பிகளில் இருந்தும்கூட தீப்பற்ற வாய்ப்பிருக்கிறது.
சிலர் வேண்டுமென்றே விளையாடுத்தனமாகத் தீப்பற்ற வைப்பதும் நடக்கும்.
வனச் சிப்பந்திகள் ஏதேனும் வழக்குப் போட்டிருக்கும் கோபத்தில், அவர்களைப் பழிவாங்க அவர்கள் பணிபுரியும் வனப் பகுதிக்குத் தீ வைப்போரும் இருக்கிறார்கள்.
குளிர்காய்வதற்காக மூட்டும் தீ காட்டுத் தீயாக ஆன சம்பவங்களும் நடந்துள்ளன.
மலைவாழ் மக்கள் தேனெடுப்பதற்காகத் தேன்கூடுகளின் அருகில் தீயைக் காண்பிப்பார்கள். இந்தத் தீகூட வன அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
- மாதப்பன்
