தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தமிழக விவசாயிகளின் காவிரி கனவு!

தமிழக விவசாயிகளின் காவிரி கனவு!

தமிழக விவசாயிகளின் காவிரி கனவு!


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபகாலமாக, செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை 'காவிரி'. இந்த காவிரிப் பிரச்னையை முன்வைத்து, கர்நாடகாவில் பெரிய கலவரமே கடந்த மாதம் நடந்து முடிந்தது. தற்போது, தமிழகத்திலும், விவசாயிகள் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகள் அமைதி, திடீரென்று சிக்கல் என முகம்மாறும் காவிரி நீர் பங்கீடு பிரச்னைக்கு பின்னால், 210 ஆண்டு வரலாறு உள்ளது. தமிழக விவசாயத்தோடு நெருங்கிய தொடர்புடைய காவிரி ஆற்று பிரச்னை, மத்திய அரசின் காவிரி நடுவர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவற்றாலும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

காவிரியின் தலை

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் இருந்து, 800 கி.மீ பயணித்து, தர்மபுரி மாவட்டம் வழியாக, தமிழகத்துக்குள் காவிரி நுழைகிறது. மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. கங்கை, பிரம்மபுத்திரா போல் காவிரி வற்றாத நதி இல்லை. மழையை நம்பியே இருப்பதால், மழை குறையும் போதெல்லாம், நதிநீர் பங்கீட்டில், மாநிலங்களில் இடையே சிக்கல் உருவாகி கொண்டே இருக்கிறது.

காவிரியும், வற்றாத பிரச்னையும்

இந்திய சுதந்திரத்துக்கு முன், தமிழகம் மதராஸ் மாகாணத்திலும் , இன்றைய கர்நாடகா, மைசூரு அரசின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. இந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே, காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில், 1807ஆம் ஆண்டு முதன்முதலாக பிரச்னை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, 87 ஆண்டுகள் பல சுற்றுகளாக பேச்சு நடத்தப்பட்டது. பின்னர், ஆங்கில அரசின் முன், 1892இல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

அதற்கு பிறகும், பிரச்னை தீராவில்லை. மைசூர் அரசு தனது எல்லைக்குள், கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைத்தது. சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையை ஏற்படுத்தியது.

சுதந்திரத்துக்குப் பின், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மத்திய அரசு, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு பரிந்துரைகள்படி 1976 ஆகஸ்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களும் சேர்ந்து 393 டி.எம்.சி. முதல் 414 டி.எம்.சி. நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி.

தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி. தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால், இதை அமல்படுத்த, கர்நாடகா அரசு முன்வரவில்லை.

பிரச்னை நீடித்ததால், 1990 ஏப்ரலில் மத்திய அரசால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு, அந்த அண்டு மே மாதம் காவிரி பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது.

ஆய்வின் அடிப்படையில், 2007 ஆம் ஆண்டு, இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட்டது.

தீர்ப்பு சொல்வது என்ன?

இறுதி தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 192 டி.எம்.சி.

தண்ணீரை கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தர வேண்டும். தமிழக பங்கில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு, 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவின் எதிர்வினை

நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடகா அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து, காவிரி நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யாமல், அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கர்நாடகா அரசு எடுத்து சென்றது.

அதன்பின், 9 ஆண்டுகள் ஆகியும், உச்ச நீதின்றத்தில் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், உச்ச நீதிமன்றம், விநாடிக்கு, 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துடன் பத்து நாட்களுக்கு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதற்கும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில், பெரும் கலவரம் வெடித்தது.

காவிரி, கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆகிறது;

அதனால், எங்களுக்கு அதன் மீது அதிக உரிமை உள்ளதாக கர்நாடகா விவசாயிகள் கூறி வருகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

இரு மாநிலங்களுக்கு இடையே, பரஸ்பர புரிதல் ஏற்பட்டு, யாருக்கும் பாதிப்பும் ஏற்படாத வகையில், முறையான ஒப்பந்தம் போட்டால் தவிர, பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஆனால், இந்த பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததாலும், இந்தியாவில் சட்ட நடைமுறைகள் மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருப்பதாலும், காவிரி பிரச்னை தீர்வின்றி தொடர்கிறது.

நூற்றாண்டுகால பிரச்னை

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தின் தலைக்காவேரி பகுதியில் காவிரி உற்பத்தியாகி, 800 கி.மீ. தூரம் பயணித்து சென்று கடலில் கலக்கிறது.

மைசூரு மற்றும் மதராஸ் மாகாணங்களுக்கு இடையே, 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன.

காவிரி நதிப்படுகை (சதுர கிலோ மீட்டரில்)

தமிழ்நாடு - 44,000

கர்நாடகா - 32,000

சுதந்திரம் கிடைத்த பிறகு, 1990 ஆம் ஆண்டு, காவிரி நடுவர் நீதிமன்றம் உருவாக்கப் பட்டது.

நீராதாரங்களைப் பெருக்க வேண்டும்

காவிரி நதிநீரைப் பெறவேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே சமயம், தமிழகத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்க போதிய நடவடிக்கைகள் இல்லை என்று விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

வற்றாத ஜீவநதிகள் இல்லாத தமிழகத்தில், குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பருவமழையையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால், குறைந்தபட்சம், தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும். கர்நாடகத்தைப் பொறுத்தவரை, காவிரி தண்ணீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களை கர்நாடகா அரசு

ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

அது என்ன காவிரி டெல்டா?

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள், காவிரி டெல்டா என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள, 14.47 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகிறது.

நதி ஒப்பந்தங்கள் சொல்வது என்ன?

உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு 'நைல் நதி' ஒப்பந்தம் வழிகாட்டியாக உள்ளது. ஆறுகள் பிறக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது அந்த ஒப்பந்தம். இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. காரணம், காவிரி தமிழநாட்டில்தான் அதிக தூரம் பயணிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us