தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெற்றிச் சிங்கம்

வெற்றிச் சிங்கம்

வெற்றிச் சிங்கம்


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதர் அலி கி.பி. 1720- - 1782

உலகெங்கும் மன்னராட்சி என்பது, பரம்பரையாக தொடர்வதுதான் வழக்கம். விதிவிலக்காக சாதாரண குடும்பத்தில் பிறந்த சில மாவீரர்கள், தங்கள் திறமையால் மன்னராவதும் உண்டு. பதே ஹைதர் பஹதூர் (தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்) என்ற பட்டப் பெயர் கொண்ட ஹைதர் அலி (கி.பி. 1720- - 1782 ) அத்தகைய மாவீரர்களில் ஒருவர்.

மைசூர் மன்னர் சிக்க கிருஷ்ணராஜ உடையாரின் குதிரைப் படையில், சாதாரண வீரராகச் சேர்ந்த ஹைதர், படிப்படியாக குதிரை படை தளபதியாகவும், பின்னர் திண்டுக்கல் பகுதியின் பவுஜ்தாராகவும் (Governor--கவர்னர்) படிப்படியாக உயர்ந்தார்.

ஹைதர் திண்டுக்கல்லில் ராணுவ ஆய்வு மையம் ஒன்றையும், பீரங்கிப் படையையும் அமைத்தார். பிரெஞ்சுப் படையினரிடம் இருந்து நவீன போர் தொழில்நுட்பங்களைப் பெற்று, தனது படையை பலப்படுத்தி வந்தார். நேரடி வரிவசூல் முறையைப் புகுத்தி விவசாயிகளின் துன்பத்தை போக்கினார்.

மைசூர் படையில் வீரர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படாததால், கி.பி.1758ஆம் ஆண்டில் வீரர்களுக்கும் மன்னருக்கும் இடையில் கலகம் மூண்டது. ஹைதர், அக்கலவரத்தை அடக்குமாறு பணிக்கப்பட்டார். அதை திறமையாக செய்த ஹைதர் அலி, தன் சொந்த முயற்சியாலும், செல்வத்தாலும் வீரர்களின் சம்பள பாக்கியை தீர்த்து, அவர்களின் பேராதரவை பெற்றார்.

இளவயது மன்னரான சிக்க கிருஷ்ணராஜ உடையாரை பொம்மையாக்கி, பெரும்பகுதி அதிகாரத்தை அமைச்சர் நஞ்சராஜும், தளபதி தேவராஜும் வைத்திருந்தனர்.

வீரர்களிடம் ஹைதருக்கு ஆதரவு பெருகியதால், அவரை தங்கள் எதிரியாகப் பார்க்கத் தொடங்கினர்.

அரசியல் சூழ்ச்சிகளை உணர்ந்த ஹைதர், முடிவில் அமைச்சரையும் தளபதியையும் சிறைப்படுத்தியதோடு, மன்னரையும் ஓரங்கட்டிவிட்டு, தன்னை மைசூர் அரசராக, பிரகடனப்படுத்திக் கொண்டார்.

1767 முதல் 1769 வரை, நடந்த முதலாம் மைசூர் போரில், ஆங்கிலேயர்கள், ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையில் ஹைதரை பல முனைகளிலும் தாக்கினர். ஹைதர் தன் போர்த்திறனால் ஆங்கிலேயர்களை தோற்கடித்தார். போரின் இறுதியில் மதராஸ் உடன்படிக்கை கையெழுத்தானது. அதில் அவரவர் ஆக்கிரமித்த இடங்களைத் திருப்பித் தருவது என்றும், மைசூர் அரசுக்கு ஆபத்து வருகையில் ஆங்கில படை உதவிக்கு வரும் என்றும், வரையரை செய்யப்பட்டது. ஹைதரின் வெற்றிக்கு அத்தாட்சியாக, ஹைதரிடம் பிரிட்டிஷ் தளபதி மண்டியிடும் ஓவியம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவில் ஆணியடித்து மாட்டப்பட்டது.

ஆனால், கி.பி. 1771ல் மராட்டியர்கள், மைசூர் மீது படையெடுத்தபோது, ஆங்கிலேயர்கள் ஹைதருக்கு உதவ முன்வரவில்லை. மேலும் ஹைதருக்கு சொந்தமான மாஹி பகுதியையும் கைப்பற்றிக் கொண்டனர். இந்த துரோகங்களைக் கண்டு கோபம் கொண்ட ஹைதர், இரண்டாம் மைசூர் போர் என்று வரலாற்றில் பதிவான நெடும் போரை 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக துவக்கினார்.

1781ல் போர்ட்டோ நோவோ (தற்போதைய கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை) என்ற இடத்தில் சர் அயர் கூட் (Sir Eyre Coote) என்ற ஆங்கிலத் தளபதியால் ஹைதர் தோற்கடிக்கப்பட்டார். 1782ல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் ஹைதரின் படை தோல்வியைத் தழுவியது. தொடர் தோல்விகளாலும், நீளும் போரினாலும் தன் வீரர்கள் சோர்வுறாது இருக்க, தனது தொலைநோக்குத் திட்டத்தை, தளபதிகளிடம் விவரித்தார் ஹைதர்.

”ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஓர் இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (ஆப்கான்) மற்றும் பாரசீக (ஈரான்) மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு, நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.”

இப்படி மகத்தான கனவுகளோடு இருந்த ஹைதர், தான் துவக்கிய போர் முடிவடையும் முன்னரே, 6.12.1782ல் தன் அறுபதாவது வயதில் தண்டுவடப் புற்றுநோயால் இறந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us