PUBLISHED ON : டிச 26, 2016

1946 - இந்தியாவின் முதல் நர்சிங் கல்லூரி
1948 - ஆசியாவிலேயே முதன்முதலாக, நரம்பியல் துறை
1971 - இந்தியாவிலேயே முதன் முதலாக, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.சி). இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகவும் மதிக்கப்படும் மருத்துவக் கல்வி நிலையமாக விளங்குகிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவக்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், தனியார் நிறுவனங்களில் முதலிடம் சி.எம்.சி.க்குத்தான்.
வேலூரில் முதன்மை மருத்துவமனையும், அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டாம் நிலை மற்றும் கிளை மருத்துவமனைகளையும் சி.எம்.சி. கொண்டுள்ளது. மருத்துவத்தின் எல்லாத் துறைகளிலும், சி.எம்.சி. முன்னோடியாக விளங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையையும், கல்லூரியையும் நிறுவியவர் டாக்டர் ஐடா ஸ்கடர் (Ida Scudder) என்னும் அமெரிக்க பெண்.
100 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் நோயாளிகளை ஆண் மருத்துவர்கள் தொட்டு மருத்துவம் பார்ப்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தது. இதனால், மருத்துவச் சிகிச்சையின்றி பெண்கள் இறக்கும் சம்பவங்கள் நடந்தன.
ஐடா ஸ்கடரின் தந்தை, மருத்துவராக பணியாற்றினார். 1895ம் ஆண்டு, ஐடாவின் தந்தையிடம் மூன்று பெண்கள் பிரசவம் பார்க்க வந்தனர். ஆனால், ஆண் மருத்துவர் என்பதால், அவர் பிரசவம் பார்க்க, அப்பெண்களின் கணவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்த மூன்று பெண்களும் அவர்களின் குழந்தைகளும் மரணமடைந்தனர். இந்த நிகழ்வு, 24 வயது ஐடா ஸ்கடரை மிகவும் பாதித்தது.
பெண் மருத்துவர்களோ, உதவியாளர்களோ இருந்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று தீர்மானித்த ஐடா, அமெரிக்கா சென்று மருத்துவம் படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இந்தியா திரும்பினார்.
வேலூரில், ஒரு படுக்கையறை கொண்ட மருத்துவமனையை, 1900ல் தொடங்கினார். அதன்பின் பெண்களுக்கென்று 40 படுக்கைகள் கொண்ட 'மேரி டாபெர் ஷெல் மெமோரியல்' மருத்துவமனையை நிறுவினார். 1903 முதல் பெண் கம்பவுண்டர்களுக்கு பயிற்சியளித்தார். 1906ல், கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவ சேவையளிக்க சாலையோர மருத்துவமனைகளை தொடங்கினார்.
1909ல், பெண்களுக்கு நர்ஸ் பயிற்சியும், 1918ல் பெண் மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் தொடங்கினார். இந்த கல்வி நிறுவனம் பின்னர் 1938ல், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியாக பரிணமித்தது. 1942 முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பு தொடங்கப்பட்டது. 1947 முதல், ஆண் மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவத் துறையை வளர்க்கும் கல்லூரி: இன்று, சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில், 175 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளும், ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும், 2,600 மாணவர்கள் சேர்கின்றனர். 11 இடங்களில் மருத்துவமனை செயல்படுகிறது. 150க்கு மேற்பட்ட துறைகள் இங்கு செயல்படுகின்றன.
22 இளநிலை படிப்புகள், 11 பட்டயப் படிப்புகள், 148 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல், கண், புற்றுநோய், கதிர் வீச்சியல், மருத்துவப் பதிவுகள் பராமரிப்பு, நோய் கூரியல், உணர்வகற்றியல் (மயக்கவியல்), சமூகம் சார்ந்த மருத்துவம், தோல் நோய், மகப்பேறு, மனநலம், செவிலியர் பயிற்சி என, எண்ணற்ற பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவுகள் உள்ளன.
மேலும், மருத்துவத் துறை அல்லாத, பிற துறைகளில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன. மானுடவியல், நோய் தொற்று அறிவியல், சமூகப் பணி, சமூகவியல், புள்ளியியல், உயிரி புள்ளியியல் போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
படிப்புக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அந்தந்த பிரிவுகளில் ஆராய்ச்சிகளைத் தொடர பயிற்சிக்காலத்தில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
http://www.cmch-vellore.edu/Default.aspx?url=./sites/common/CMC%20Background%20updated%20Aug%202016.pdf என்ற இணையதளத்தில் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புப் பிரிவுகள் குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம்.
- தமிழ்ச்செல்வன்