
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்
குன்னக்குடி வைத்தியநாதன்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
இந்தப் பெயர்களுக்கிடையே என்ன ஒற்றுமை?
இவர்களெல்லாரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள். அனைவரும் தங்களுடைய பெயருக்கு முன்னே ஓர் ஊரின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஊர், அவர்களுடைய பிறந்த ஊராக இருக்கலாம் அல்லது வளர்ந்த ஊராக இருக்கலாம்; ஏதோ ஒரு காரணத்தால் அவர்களோடு சேர்ந்து இந்த ஊர்ப்பெயர்களும் புகழ்பெற்றுவிட்டன.
சில நேரங்களில், மக்கள் இவர்களுடைய சொந்தப்பெயரைக்கூட மறந்துவிடுவார்கள். ஊர்ப்பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். எடுத்துக்காட்டாக, 'குன்னக்குடி வயலின் அருமை' என்று ஒருவர் பாராட்டினால், அவர் உண்மையில் குன்னக்குடி என்கிற ஊரையா பாராட்டுகிறார்? குன்னக்குடி வைத்தியநாதன் என்கிற கலைஞரைத்தானே!
இன்னும் சிலர் ஊர்ப்பெயரை மரியாதையுடன் குறிப்பிட்டு, அதையே அந்த நபருக்குப் பெயராக்கிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, தமிழக முதல்வர் 'எடப்பாடி பழனிசாமி'யை 'எடப்பாடியார்' என்று குறிப்பிடுவதுண்டு.
இது ஏதோ புதிய மரபு என்று எண்ணிவிடவேண்டாம். தமிழில் நெடுங்காலமாக இப்படி ஊர்ப்பெயரை, ஒருவர் வசிக்கும் இடத்தைப் பயன்படுத்தி அவருக்குப் பெயரிடும் பழக்கம் உண்டு.
எடுத்துக்காட்டாக, மலைப்பகுதித் தலைவனை, 'வெற்பன்' என்பார்கள், கடல்பகுதித் தலைவனைச் 'சேர்ப்பன்' என்பார்கள். காரணம், 'வெற்பு' என்றால் மலை. அங்கே வாழ்பவன் 'வெற்பன்'. 'சேர்ப்பு' என்றால், கடலும் நிலமும் சேரும் இடம், கடற்கரை. அங்கே வாழ்பவன் 'சேர்ப்பன்'.
மனிதர்களைப்போலவே, கடவுளருக்கும் ஊரைக்கொண்டு பெயரிடும் வழக்கமுண்டு. 'பழனிமலையானே' என்று முருகனை அழைப்பார்கள், 'வேங்கடமலை' எனப்படும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் கடவுளை 'வேங்கடாசலபதி' என்பார்கள். அல்லது ஏழுமலையான் என்பார்கள். காரணம் ஏழுமலைகளைக் கடந்து இருப்பதால்.
இப்படி ஊர்ப்பெயரைச் சிறப்புப்பெயராகச் சூட்டும் பழக்கம் எப்படி வந்திருக்கும்?
கலைத்துறை, சமூகப்பணி, அரசியல் போன்றவற்றில்தான் இதுபோன்ற சிறப்புப் பெயர்களை அதிகம் பார்க்கிறோம். மற்றவர்களைவிட இவர்கள் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டு வித்தியாசப்படுத்துவதற்காக இந்தப் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, 'கிருஷ்ணன்' என்ற பெயரில், ஊரில் பலர் இருக்கலாம்; ஆனால் 'நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்' என்று சொன்னால் அவரைச் சிறப்பித்துக் கூறுவதாகிறது.
அன்றைய புலவர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னே ஊரின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்: அரிசில்கிழார், அள்ளூர் நன்முல்லையார், பொத்தியார், நன்னாகையார், மாங்குடி மருதனார் இன்னும் பலர்.
அரிசில், அள்ளூர், ஆலங்குடி,பொத்தி, கச்சிப்பேடு, மாங்குடி போன்ற ஊர்களை இன்று நாம் கேள்விப்படாமலிருக்கலாம்; ஆனால், இந்தப் புலவர்களின் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அந்த ஊர்களையும் நாம் எண்ணிக்கொள்கிறோம்.
உங்கள் சொந்த ஊர் எது? நாளைக்கு நீங்களும் இப்படிப் பெரிய அளவில் புகழ்பெற்று அந்த ஊருக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகள்!
- என். சொக்கன்

