
சிந்தம் அல்லது சிந்தகம் என்றால் என்ன என்று தெரியுமா? ஏதோ ரசாயனக் கலவை மாதிரி இருக்கே என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மரத்தின் பழைய பெயர். நெடுஞ்சாலைகளில் நிழல்தரும் மரமாகவும் இதை நட்டு வைத்திருக்கிறார்கள். ஓங்கி உயர்ந்திருக்கும் மரத்தின் கிளைகளில் பழங்கள் கொத்துக்கொத்தாய் தொங்கும். நம் வீட்டில்கூட விதை, ஓடு நீக்கிய இதன் பழத்தை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதில் செய்யப்படும் சாதம் புளிப்புச் சுவையுடன் இருக்கும். ஊறுகாய்களில் கெடாமல் இருப்பதற்கும் இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் துளிரில் துவையல் செய்து சாப்பிட்டால் நாக்கில் எச்சில் ஊறும். கீழே உதிரும் இதன் பழத்தை சிறுவர்கள் பார்த்தால் விடமாட்டார்கள். இதன் விதை (கொட்டை)யும் வறுத்து தோல் நீக்கி உப்பு போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மரத்தின் கிளைகள் வலிமை வாய்ந்ததாக இருக்கும். இக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடலாம். பரந்து விரிந்து நிழல் தரும், பயன்மிகு இந்த விருட்சத்திற்கு புளிய மரம் என்று பெயர்.
இலக்கியங்களில் சிந்தம் அல்லது சிந்தகம் என்று அழைக்கப்படுகிறது. சிந்தாமணி என்னும் இலக்கண நூலில் (206ம் பாடல்), அம்மிலிகை என்றால் புளி அல்லது புளிய மரத்தை குறிக்கும் என்று குறிப்பிடுகிறது.
'அமுது செய்தற் பேருண்டலம்மிலிகை'.

