
ஆகஸ்ட் 29, 2009: சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு நாள்
முதன்முதலாக 1945ல், இரண்டாம் உலகப்போரின் கடைசிக் கட்டத்தில், ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதன் பிறகு பல அணு ஆயுத சோதனைகள் உலகம் முழுக்க நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகள் பற்றியும், பரவலைத் தடுக்கவும் ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 29, 1905: தயான் சந்த் பிறந்த நாள்
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர். ராணுவ அணி சார்பில் ஹாக்கி விளையாடி, இந்திய அணியின் கேப்டன் ஆக உயர்ந்தார். 1928, 1932, 1936களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தார். 1956ல் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாள் இந்திய தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 30, 1981: சர்வதேச காணாமல் போனோர் நாள்
உலகின் பல நாடுகளிலும் காவல் துறையாலோ அல்லது பாதுகாப்புப் படையாலோ பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகசியமான கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கங்கள் போராடி வருகின்றன.
ஆகஸ்ட் 30, 2001: சிறு தொழிற்சாலைகள் நாள்
சிறு தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. குறைந்த மூலதனத்தின் மூலம் வேலை வாய்ப்பை வழங்குவதே இதன் சிறப்பு. சிறு தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 2, 1998: உலக தேங்காய் நாள்
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு வியட்நாமில் நடைபெற்றபோது, இந்த நாள் பிரகடனம் செய்யப்பட்டது. தென்னையின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி, அதன் பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம்.

