PUBLISHED ON : பிப் 20, 2017

தையல்காரக்குருவி
ஆங்கிலப் பெயர் : 'டெய்லர் பேர்டு' (Tailor Bird)
உயிரியல் பெயர் : 'ஆர்த்தோடோம ஸ்சுட்டோரியஸ்'(Orthotomus Sutorious)
தோட்டங்களில் 'க்வீ… க்வீ…' என்று தனித்துக் கேட்கும் கணீர்க் குரலைக் கேட்டதுண்டா? அதுதான் தையல்காரக்குருவி. கைக்குள் அடங்கிவிடக்கூடிய அளவுள்ள சிறு குருவி இது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்பி, அழகாகப் பாடும். 'சிஸ்டிகோலிடே' (Cisticolidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. ஆசியா முழுவதும் உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில், இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது. உடலின் மேற்பகுதி பழுப்பான பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். மேல்நோக்கி நீண்ட சிறு வால் பகுதியை உடையது. சிறு பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். பொதுவாக, பூக்களில் உள்ள பூச்சிகள், வண்டுகள் போன்றவற்றை விரும்பி உண்ணும். தோட்டங்கள், வயல்வெளிகளில் தனியாகவும், ஜோடியாகவும் பறந்து திரியும்.
இந்தப் பறவை, கூட்டினை அமைக்கும் முறை வித்தியாசமானது. சற்று அகலமாக உள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்து, அதை சிலந்தி வலையைச் சுற்றி ஒட்டும். இலையில் சிறு சிறு துவாரங்கள் செய்து அதன் வழியே பஞ்சு, காய்ந்த வேர், சருகுகள் போன்றவற்றைத் திணித்து கூட்டினை அமைக்கும். தையல் புரிவது போல தனது கூட்டை உருவாக்குவதாலேயே, இதற்கு இப்படி பெயர் வந்தது. மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இவற்றின் இனப்பெருக்க காலம். கூட்டினுள் ஆறு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டு பறவைகளும் மாறி மாறி அடை காக்கும். குஞ்சுகள் பொரித்த உடன், உணவு அளிக்கும் பணியையும் இரண்டு பறவைகளும் மேற்கொள்ளும்.
நீளம்: 14 செ.மீ.
எடை: 10 கிராம்
- கி.சாந்தா

