
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
கண் இமைகள் இமைப்பது அனிச்சை செயலா? இமைக்காமல் இருந்தால் என்னவாகும்?
ந.கி. மதுபிரசாத், 6ம் வகுப்பு, தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி, தேனி.
மூச்சுவிடுதல் போல இமைப்பதும், ஓர் அனிச்சை செயல்தான்! கண்ணைச் சுத்தப்படுத்த, 'கண் இமைத்தல்' உதவுகிறது என்றாலும், ஏன் ஒரு நிமிடத்துக்கு 15 - 20 முறை கண் இமைக்கிறோம் என்பது உடலியல் புதிராகவே இருக்கிறது! கண் இமைக்கும் நேரத்தை, மிகமிகக் குறைந்த கால அளவு என நாம் கருதுகிறோம். ஆனால், இது நொடியில் பத்தில் ஒரு பகுதியே. கண்கள் சுமார், நொடியில் பத்தில் ஒருபகுதி மூடித் திறக்கிறது. அதாவது கண்விழித்து இருக்கிறோம் என நாம் கருதும் நேரங்களில், சுமார் 10%, கண்ணை மூடித்தான் வைத்திருக்கிறோம்! கண் இமைக்கும்போது, எண்ணெய் கலந்த நீர்மப் பொருளைச் சுரக்கிறது. இந்த நீர் கண்ணின் மேல் படியும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிப்பதோடு, கண்களை ஈரப்பசையுடனும் வைக்கிறது. பிரகாசமான ஒளி, தூசு போன்றவற்றில் இருந்தும், கண் இமைக்கும் செயல் கண்களுக்குப் பாதுகாப்பு தருகிறது. கண் இமைக்கும் தன்மை பழுதுபட்டால், கண் உலர்ந்து வறட்டுக்கண் நோய் ஏற்பட்டு கண்பார்வை மங்கிவிடும்.
கேஸ் ஸ்டவ் பற்றவைக்க உதவும் லைட்டரில் நெருப்புப் பொறி எவ்வாறு உண்டாகிறது?
பா.ரக்ஷனி, 9ம் வகுப்பு, புனித அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூர்.
குவார்ட்ஸ், புஷ்பராகம் போன்ற சில வகைப் படிகங்களை அழுத்தினால், அதிலிருந்து சிறிதளவு மின்சாரம் வெளிப்படும். இதை பிசோ - மின் விளைவு (Piezo -- electric) என்பார்கள். அதுபோல, லைட்டரை அழுத்தும்போது, அதன் உள்ளிருக்கும் உலோகச் சுருளும் (ஸ்பிரிங் - Spring) உடன் அழுந்துகிறது. அந்த அழுந்திய உலோகச் சுருள், வேகமாக பிசோ படிகம் மீது மோதும். மோதுவதால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, 700 - 800 வோல்ட் அளவில், மிகுமின் அழுத்த மின்பொறி உருவாகிறது. இந்த மின்பொறிதான் தீப்பொறியாக மாறி, அடுப்பைப் பற்றவைக்க உதவுகிறது.
பெட்ரோல் ஊற்றினால் இயங்கும் வாகனங்கள், நீர் ஊற்றினால் ஏன் இயங்குவதில்லை. நீரில் செயல்படும் இயந்திரம் இல்லையா?
ர.ராகவி, 5ம் வகுப்பு, பிரசிடென்சி பள்ளி, பெரியகுளம், தேனி.
நீங்கள் கேட்பதுபோல, நீரில் செயல்படும் இயந்திரம் இல்லை. ஏனெனில், நீரை எரிக்க முடியாது! ஆக்சிஜனேற்றம் எனும் வேதிவினைதான் எரிதல். ஏற்கெனவே H2Oல் ஆக்சிஜன் இருக்கிறது; எனவே நீரில் ஆக்சிஜனேற்றம் (எரிதல்) சாத்தியமில்லை. எனவே, நீரிலிருந்து ஆற்றல் வெளிப்படாது. பெட்ரோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்படும் இன்ஜின்களை, நீரைக் கொண்டு இயக்க முடியாது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் எரியும்போது, ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. வாகனங்களை இயக்க இந்த ஆற்றல்தான் பயன்படுகிறது.
மனிதனின் இதயம் நிமிடத்துக்கு சரியாக 72 முறை துடிக்கக் காரணம் என்ன? எதன் அடிப்படையில் துடிக்கிறது?
ரா. சௌந்தர்யவதனி, 9ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கொத்தட்டை, புவனகிரி.
ரத்த ஓட்டத்தின் அடிப்படையில் இதயம் துடிக்கிறது. ரத்த ஓட்டத்தின்போது, ஊட்டச்சத்துகளும் ஆக்சிஜனும் நல்ல ரத்தத்தை உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் சென்று, அங்கே உள்ள கழிவுகளை கூட்டிப் பெருக்கி எடுத்து வரும். ரத்தத்தை உடலில் சுழல வைக்க, இதயம் ஒரு பம்ப் (Pump) போலச் செயல்படுகிறது.
தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போது, துடிக்க ஆரம்பித்து இறக்கும் வரை இடைவிடாது இதயம் இயங்கும். இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கும் 'சைனஸ் நோடு' (Sinus Node) எனும் பகுதி, இயற்கையாக மின் அதிர்வைத் தரும். மின் அதிர்ச்சிதான் இதயத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பிலும் பாதிப்பு ஏற்படும். இதயம் சீரற்றுத் துடிப்பதை, 'சீரற்ற இதயத் துடிப்பு நோய்' என்கிறார்கள்.
தொலைக்காட்சி பார்க்கும்போது, படுத்திருக்கும்போது என ஓய்வான நேரத்தில், திசுக்களுக்குக் கூடுதல் ஆக்சிஜன் தேவையில்லை. எனவே, இந்த நேரத்தில் இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். ஆனால், கடினமாக வேலை செய்யும்போதோ, விளையாடும்போதோ திசுக்களுக்குக் கூடுதல் ஆக்சிஜனும், ஊட்டச்சத்தும் தேவை. எனவே, இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
ஓய்வுநேரத்தில் 60 - 100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 70 - 100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். இதயத் துடிப்பு 100ஐ தாண்டினால், 'மிகைத் துடிப்பு' என்றும், 60க்குக் கீழ் குறைந்தால், 'குறைத் துடிப்பு' என்றும் அர்த்தம்.

