sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

காஃபி டே!

/

காஃபி டே!

காஃபி டே!

காஃபி டே!


PUBLISHED ON : செப் 25, 2017

Google News

PUBLISHED ON : செப் 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“எனக்கொரு உண்மை இப்ப தெரிஞ்சாகணும்.” என்றபடி பாலு வந்தான். ஏதோ படத்தில் அவன் கேட்ட வசனம் அது. அடிக்கடி இப்படி சொல்லிக்கொண்டு வருவான். அடுத்த டயலாக், “என் ஹெட்ஃபோனை யார் எடுத்தது?” என்பதாக இருக்கும்.

“உனக்கு உண்மை தெரிஞ்சாகணும் என்பது உன்னோட உரிமை பாலு” என்றார் ஞாநி மாமா.

“இதெல்லாம் கூட உரிமைகள்ல வருமா?” என்றேன். “ரைட் டு நோ (Right To Know) என்பதை ஐக்கிய நாடுகள் சபை, உலக மக்கள் எல்லாருக்கும் உள்ள உரிமைகளில் ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது. அதனால்தான், ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் மன்மோகன் அரசு, 'ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட்' எனப்படும் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக்' கொண்டு வந்தது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் தகவல் தரும் அலுவலர் இருக்க வேண்டும். யாரும் ஒரு தகவல்கோரி விண்ணப்பிக்கலாம். ஒரு மாதத்துக்குள் பதில் சொல்லியாகவேண்டும். சொல்லாவிட்டால், மாநிலத் தகவல் ஆணையத்திடம் புகார் செய்யலாம். தகவல் தர மறுத்த அதிகாரிக்கு, அபராதம்கூட விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.” என்று சொன்ன மாமா, “இந்தியா முழுக்க பல சமூக ஆர்வலர்கள் பல விஷயங்களை, குறிப்பாக முறைகேடுகளை ஆர்.டி.ஐ. சட்டத்தைப் பயன்படுத்தி அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.” என்றார்.

“எல்லா தகவல்களையும் ஒழுங்காகக் கொடுத்துவிட்டால், நிறைய தப்புகள் அம்பலமாகிவிடுமே” என்றேன். “அதனால்தான் பல அரசு அதிகாரிகள் தகவல் தராமல் மழுப்பும் வழிகளைக் கையாள்கிறார்கள். அதை மீறி பல தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.” என்றார் மாமா.

அம்மா எங்கள் எல்லாருக்கும் காஃபி கொண்டு வந்தார். “ஃபில்டர் காஃபியா? உடனடியா?” என்றான் பாலு. அவனுக்கு மட்டுமல்ல, எங்கள் எல்லாருக்கும் ஃபில்டர் காஃபிதான் பிடிக்கும். ஆனால், நிறையப் பேர் வீடுகளில் ஃபில்டர் போட மாட்டார்கள். டீ போடுவது மாதிரியே காப்பி பொடியை நேரே பாலில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டிக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் காப்பி குடிக்காமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றும். அதனால் நான் நிறைய வீடுகளில் கேட்ட உடன் டீ குடுங்க என்று சொல்லிவிடுவேன்.

அம்மா தந்த ஃபில்டர் காஃபியை ரசித்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டே பாலு கேட்டான். “ எனக்கு இப்ப ஓர் உண்மை தெரிஞ்சாகணும். காஃபி எப்ப நம்ம நாட்டுக்கு வந்தது?”

“தமிழ்நாட்டுக்கு எப்ப வந்ததுன்னு தெரியணும்னா ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதின 'அந்த காலத்தில் காப்பி இல்லை' புத்தகத்தைப் படி. இதுதவிர இன்னும் நல்ல கட்டுரைகள் கூட இருக்கும்.” என்ற மாமா, “இந்தியாவுக்கு யார் காஃபியைக் கொண்டு வந்தாங்க தெரியுமா?” என்றார்.

“யாராவது கும்பகோணத்து அய்யராத்தான் இருக்கும். அங்கே இருந்துதானே ஃபில்டர் காஃபி பிரபலமாயிருக்கு.” என்றேன்.

“இல்லை. ஒரு முஸ்லிம் துறவிதான் இந்தியாவுக்கு காஃபியைக் கொண்டு வந்தார். 1650ம் ஆண்டு அவர் மெக்காவுக்குப் போயிருந்தார். அப்ப அரேபியாவிலிருந்து பச்சை காஃபி கொட்டையை வெளிநாட்டுக்கு எடுத்துப் போக அனுமதி கிடையாது. துறவி பாபா புதான் தன் இடுப்புத் துணியில ஏழு காப்பிக் கொட்டைகளை முடிஞ்சு வெச்சுகிட்டு இந்தியாவுக்கு கடத்திவந்தார். அவர் மைசூர்க்காரர். அங்கே சந்திரகிரி மலையில அந்த விதைகளை நட்டார். அதிலருந்துதான் இந்தியால காப்பி விவசாயம் ஆரம்பமாயிருக்கு. இன்னிக்கு இந்தியால விளையற காப்பில 71 சதவீதம் அந்த சிக்மகளூர் மாவட்டத்துலதான் பயிராகுது. தமிழ்நாட்டுல காப்பி உற்பத்தி 5 சதவீதம்தான். கேரளால 21 சதவீதம். ஆனா இந்தியால காப்பி மொத்த உற்பத்தியில 70 சதவீதம் வெளிநாட்டுக்குதான் ஏற்றுமதியாகுது. நாம குடிக்கறது மீதி 30 சதவீதம்தான்.” என்றார் மாமா.

“நல்ல காஃபி குடிச்சுகிட்டு, இனிமையான பாட்டு கேட்டுகிட்டு ஹோம் ஒர்க்கையெல்லாம் மறந்துட்டு உட்கார்ந்திருக்கறது பெரிய சுகம்தான் மாமா” என்றேன்.

“அதனாலதான், உலக காஃபி தினமும் உலக இதய தினமும் அடுத்தடுத்து வெச்சிருக்காங்க. காஃபி தினத்தன்னிக்கே உலக இதய தினமும் கொண்டாடறாங்க. நம்ம மனசுக்குப் பிடிச்சது இல்லியா காஃபி?” என்று சிரித்தார் மாமா.

“ஆனா காஃபி குடிக்கறது ஹார்ட்டுக்கு நல்லது இல்லேன்னு சொல்லுவாங்களே.” என்றேன்.

“அதெல்லாம் பழைய கதை. இப்ப புது ஆய்வுகள்ல காஃபி குடிக்கறது ஹார்ட்டுக்கு நல்லது. இதய நோய்கள் வராம தடுக்கும்னு சொல்றாங்க. காஃபில இருக்கற குளோரோஜினிக் அமிலம் ரத்தத்துல இருக்கற சர்க்கரை அளவை சமன்படுத்துதாம். கஃபீன் ரத்த நாளங்கள்ல அடைப்பு வராம தடுக்குதாம். பைரிடினியம் ரத்த நாளங்கள்ல அங்கங்க உறைவு ஏற்படாம கரைக்குதாம்.” என்றார் மாமா.

“நான் பெரியவனானதும்…” என்று ஆரம்பித்தான் பாலு.

“பாலு, எனக்குக்கூட 30 வயசுல அந்த மாதிரி நிறைய ஐடியா இருந்தது. நான் வேலை பார்த்த ஆபிசுல எல்லார் சீட்டுக்குப் பக்கத்துலயும் ஒரு குழாய் வரணும். அதை எப்பத் திறந்தாலும் சூடா காஃபி கொட்டணும்னு நினைப்பேன். இருபது ஆண்டுகள் கழிச்சு பார்த்தா, நிறைய ஆபீசுல காஃபி மேக்கிங் மெஷின் வந்திருச்சு.”

“என்னோட டிரீம் ஒரு காஃபிக் கடை. பெரிய பேரல்ல காஃபி இருக்கும். குழாயத் திறந்து எல்லாரும் காஃபி குடிக்கலாம். நான் வயலின் வாசிச்சுகிட்டிருப்பேன்.” என்றான் பாலு.

“அதுதான் கொஞ்சம் சிக்கலா இருக்கு” என்று சிரித்தேன்.

“நீ இப்படி பாலுவை இன்னிக்கு ஓட்டக் கூடாது. இன்னிக்கு குட் நெய்பர் டே.” என்றார் மாமா.

“நல்ல அண்டை வீட்டுக்காரர் தினம்னா, அதை எப்படிக் கொண்டாடறது?” என்றேன்.

“ரெண்டு பக்கத்து வீட்டுக்கும்போய் 'ஏதாவது ஹெல்ப் வேண்டுமா? டெலிபோன் பில், மின்சார பில் எல்லாம் நெட்ல கட்டித் தரணுமா?'ன்னு கேட்டுட்டு ரெண்டு சாக்லெட் குடுத்துட்டு வா. ஏன் இப்படி செய்யறேன்னு கேட்டா குட் நெய்பர் டே பத்தி சொல்லு. அவங்க அடுத்த வீட்டுக்குப் போய் கொண்டாடுவாங்க. இப்படியே எல்லாரும் கொண்டாடுவாங்க.” என்றார் மாமா.

“அப்படியே அடுத்தடுத்த வீடுன்னு கொண்டாடிகிட்டே போனா உலகமே குட் நெய்பர் ஆயிடுமே மாமா” என்றான் பாலு.

“குட் நெய்பர் டேவைக் கொண்டாடத்தான் நான் காஃபி கொடுத்தேன்.” என்றார் அம்மா.

“உனக்கெப்படிம்மா தெரியும்?” என்றேன்.

“வாலுதான் எனக்கு சொன்னது. இந்த வாரம் நிறைய டே கொண்டாட இருக்காமே. டூரிசம் டே, டிரான்ஸ்லேஷன் டே, ரேபீஸ் எதிர்ப்பு டே, பசியிலிருந்து விடுதலைக்கான நாள்..” என்று அம்மா அடுக்கிக் கொண்டே போனார்.

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் பாலு மறுபடியும். “365 நாள்ல கொண்டாட்டம் இல்லாத நாள் ஏதாவது மீதி இருக்கா?”

“இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம், நீ இன்னொரு நாளைக் கொண்டாடிட்டே பாலு” என்றார் மாமா. “என்ன அது?” என்றான் பாலு.

“ஆஸ்க் எ ஸ்டுபிட் கொஸ்சன் டே (ask a stupid question day). எப்பவுமே சரியாத்தான் கேட்கணுமா என்ன? ஸ்டுபிட்டா கேட்கவும் சுதந்திரம் வேணும் இல்லையா?” என்றார் மாமா.

எல்லாரும் “ஆமாமா” என்றோம்.

வாலுபீடியா

செப். 26 - நல்ல அண்டைவீட்டுக்காரர் தினம்

செப். 27 - சுற்றுலா தினம்

செப். 28 - பசியிலிருந்து விடுதலை தினம்

தகவல் அறியும் உரிமை தினம்

வெறிக் கடி விழிப்புணர்வு தினம்

அசட்டுக் கேள்வி கேட்கும் தினம்

செப். 29 - உலக இதய தினம், உலக காஃபி தினம்

செப்.30 - மொழிபெயர்ப்பு தினம்

அக்.1 - உலக இசை தினம்






      Dinamalar
      Follow us