PUBLISHED ON : அக் 19, 2016

நாமெல்லாம் பேப்பரில்தான் வண்ணம் பூசுவோம். ஆனால், 'ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம்' (Hans Christian Gram) என்ற டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, 1882ஆம் ஆண்டில் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களுக்கு வண்ணம் பூசும் முறையைக் கண்டறிந்தார்.
ஒரு கண்ணாடி ஸ்லைடில் (Slide), கொஞ்சம் பாக்டீரியாக்களை எடுத்துக் கொண்டு, அதை முதலில் உலர வைத்தார். அதன் மேல் கிராம், 'கிரிஸ்டல் வயலட்' (Crystal Violet) என்ற மையை ஊற்றி,மை நன்றாக ஒட்டிக் கொண்டதும், நீரால் கழுவினார். அடுத்து கிராம் 'ஐயோடின்' (Iodine) என்ற திரவத்தை ஊற்றி, சிறிது நேரம் கழித்து, நீரால் கழுவினார். உலர்ந்ததும், மைக்ராஸ்கோப் (microscope) மூலம் ஆராய்ந்தார்.
சில பாக்டீரியாக்கள் ஊதா நிற சாயத்தை ஏற்றிருந்தன. அவற்றை 'கிராம் பாஸிட்டிவ்' (Gram Positive) பாக்டீரியாக்கள் என்று வகைப்படுத்தினார். சில பாக்டீரியாக்கள் சாயத்தை ஏற்காமல் இருந்தன. அவற்றை 'கிராம் நெகட்டிவ்' (Gram Negative) பாக்டீரியாக்கள் என வகைப்படுத்தினார். பின்னாளில் இம்முறை, 'கிராம் ஸ்டெய்னிங்' (Gram Staining) என்று அழைக்கப்பட்டது.
இந்த கிராம் ஸ்டெய்னிங் முறையால் என்ன பயன்?
இதன் மூலம் பாக்டீரியாக்களை இரு வகையாகப் பிரித்து, அவற்றின் பண்புகளை தெரிந்து கொள்ளலாம்.
கிராம் பாஸிட்டிவ் பாக்டீரியாக்கள், பெப்டிடோக்ளைகன் (Peptidoglycan) எனப்படும் சர்க்கரை மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பிய மூலக்கூறுகளால் உருவான தடிமனான, செல் சுவரைக் கொண்டிருப்பவை. நெகடிவ் பாக்டீரியாக்களின் செல் சுவர், இரு புறமும் கொழுப்பு படலத்தால் சூழப்பட்ட மெல்லிய பெப்டிடோக்ளைகன் படலத்தைக் கொண்டிருக்கும். இதனால்தான் மையைஉறிஞ்சும் தன்மையில் இவ்வளவு வேறுபாடு.
நுண்ணுயிரியல் (Microbiology-மைக்ரோபயாலஜி) துறையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இது போற்றப்படுகிறது.
இதைக் கொண்டு எந்த வகையான பாக்டீரியாக்கள், எந்த வகையான நோய்களை உண்டாக்குகின்றன என்பதைக் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு பாக்டீரியா இரண்டிலிருந்து பத்து மைக்ரான் (Micron) அளவுதான் இருக்கும். ஒரு மில்லிமீட்டரை ஆயிரம் பங்காகப் பிரித்தால், அதில் ஒரு பங்கு நீளம்தான் ஒரு மைக்ரானின் அளவு. அவ்வளவு சிறிய பாக்டீரியாக்களுக்கு வண்ணம் ஏற்றி சாதனை செய்த கிறிஸ்டியன் கிராமை நினைவு கொள்வோம்.
குளாஸ்ட்ரிடியம் டெட்டனி (Clostridium Tetani) பாசிட்டிவ் டெட்டனஸ் (Tetanus)
கார்ய்ன்பாக்டீரியம் டிப்தீரியா (Corynebacterium Diptheria) பாசிட்டிவ் டிப்தீரியா (Diptheria)
சால்மனெல்லா டைஃபி (Salmonella Typhi) நெகடிவ் டைஃபாரய்டு (Typhoid)
விப்ரியோ காலரே (Vibrio cholerea) நெகடிவ் காலரா (Cholera)
