
காத்தாடி செய்து விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடிக்கும். விதவிதமான பொருட்களில் காத்தாடி செய்யலாம். பொதுவாகக் கிராமப்புறங்களில் பனை, தென்னை ஓலைகளில் காத்தாடி செய்வார்கள். நாம் ஒரு துண்டுத் தாளையும் பென்சிலையும் வைத்து, காத்தாடி செய்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: வண்ணத்தாள் - 9 செ.மீ. அகலம், 9 செ.மீ. உயரம். குண்டூசி, அரை அடி ஸ்கேல், கத்தரிக்கோல், பசை, பிளாஸ்டிக் ஸ்டிரா.
சதுர அளவில் இருக்கும் வண்ணத்தாளை மூலைவிட்டங்களில் மடித்து மையத்தில் புள்ளி வைக்கவும். நடுப்பகுதியை மடிக்கும்போது அழுத்தி நீவாமல் லேசாக மடிக்க வேண்டும்.
மையப்புள்ளியில் இருந்து மூலைவிட்டத்தில் இரண்டு செ.மீ. அளவுக்குக் கோடுகள் வரைந்துகொள்ளவும்.
முனையில் தொடங்கி கோடு வரையாத மடிப்பில் கத்தரித்துக்கொண்டே வர வேண்டும். கோடு தொடங்கும் புள்ளியில் கத்தரிப்பதை நிறுத்த வேண்டும்.
இப்படி நான்கு பக்கங்களிலும் கத்தரித்த பிறகு, ஒவ்வொரு பாகத்திலும் இரண்டு முனைகள் இருக்கும். கடிகாரத் திசையில் தொடங்கி, ஒவ்வொரு பாகத்திலும் இரண்டாவது முனையை மையத்தை நோக்கி மடிப்பு விழாமல் மடக்கி ஒட்டிவிட வேண்டும்.
மையத்தில் குண்டூசியைக் குத்திவிடவும். ஸ்டிராவை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு, குண்டூசியின் மறுமுனையில் உறை மாதிரி நுழைத்துவிடவும். ஊசி முனையைப் பென்சிலில் அழுத்திக் குத்திட்டால் காத்தாடி செய்யும் வேலை முடிந்தது.
காற்று அடித்தால் காத்தாடி வேலை செய்ய ஆரம்பித்துவிடும்!
-ஓவியா டீச்சர்

