PUBLISHED ON : செப் 11, 2017
பள்ளிக்குச் செல்ல பாதை மாறி பரிதவித்த ஒரு சிறுமிக்காக, வாடகைக் கார் ஏற்பாடு செய்து, அதற்குரிய பணத்தையும் தந்திருக்கிறார் ஒரு நடத்துனர். சம்பவம் நடந்தது இங்கல்ல; இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில். புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த மாணவி ஒருவர், முதல் நாள் பள்ளிக்குச் செல்லக் கிளம்பியபோது வழிதவறிவிட்டார். பாதையோரம் குழப்பத்தோடு நின்று கொண்டிருந்த சிறுமியின் பதற்றத்தை, அவ்வழியாக வந்த ஒரு பேருந்தின் நடத்துனர் கவனித்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்தி, அச்சிறுமியிடம் சென்று விசாரித்து, விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறார். முதல் நாள் பள்ளி செல்ல தாமதமாகி விடுமே என்ற கவலையில் இருந்த சிறுமிக்கு ஆறுதல் கூறி, வாடகைக்கு டாக்சி ஏற்பாடு செய்து, அதற்கு பணமும் கொடுத்து அப்பெண்ணை அனுப்பி வைத்தார். அவரது நற்செயலை பேருந்துப் பயணிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இச்செய்தி இப்போது வைரலாகிவிட்டது. வலை மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

