PUBLISHED ON : பிப் 03, 2020

'நாசா' பறக்கும் புதுச்சேரி மாணவர்கள்“மாணவர்கள் என்னமா பதில் சொல்கிறார்கள்? காலையிலேயிருந்து பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கு. எங்க காலத்துல நடைபெற்ற போர்ன்விடா குவிஸ் மாதிரி மிகவும் தரமா இருக்கு. இதுபோன்ற குவிஸ்கள் அடிக்கடி நடக்கணும். அப்பத்தான், நிறைய பேர் ஆர்வமா படிப்பாங்க. நல்லா கவனிப்பாங்க.” என்று உணர்வெழுச்சியோடு பாராட்டிப் பேசியவர், புதுச்சேரியின் ஆட்சியர் டாக்டர் டி.அருண்.
நேற்று காலை, புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழின் 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி- வினா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 87 பள்ளிகள் இந்த மெகா வினாடி- வினா நிகழ்ச்சியில் பங்குபெற்றன. அமெரிக்காவில் உள்ள அறிவியல் ஆய்வு மையமான நாசாவுக்குச் செல்லும் வெற்றி அணி எது என்பதைத் தேர்வு செய்வதற்கான இறுதிப் போட்டியே கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
காலை 8 மணி முதலே அணிஅணியாக மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திரளத் தொடங்கினர். கைகளில் பழைய பட்டம் இதழ்களையும் இதர பொது அறிவுப் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு பல மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தனர். தமிழ்மொழியில் இதுபோன்று பெரிய அளவில் நடைபெறும் போட்டி இதுவொன்றே என்பதால், பல மாணவர்களின் முகத்தில் ஆவலும் உத்வேகமும் தெரிந்தது.சரியாக ஒன்பது மணிக்குப் புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய தகுதிச் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதலில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் மாணவர்கள் விடையளித்தார்கள். இதுவரை இறுதிப் போட்டிகள் நடைபெற்ற கோவை, மதுரை ஆகியவற்றைவிட, புதுச்சேரி மாணவர்கள், தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்தனர். பின்னர் இறுதிச் சுற்று தொடங்கியது. நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
குறுக்கெழுத்துச் சுற்றில் எல்லா அணிகளும் போட்டி போட்டுகொண்டு மதிப்பெண்களை அள்ளினர். இறுதிச் சுற்றான 'பட்டம், வேகம், விவேகம்' சுற்றில், மற்ற அணிகளும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று வேகம் பிடித்தனர்.
மேடையில் இருந்த மாணவர்களைப் போலவே அரங்கில் இருந்த மாணவர்களும், உற்சாகமாகப் பதில்களைச் சொல்லி, பரிசுகளை அள்ளிக்கொண்டார்கள். மாணவர்களுக்கான பரிசுகளை வழங்க வந்திருந்தார் புதுச்சேரி வருவாய்த் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான். அவர் பேசும்போது, “நாசாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன், அதை நேரில் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பை இந்த மாணவர்கள் பெறுகிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக, பிரிட்டிஷார்கள், தங்களுக்கு குமாஸ்தாக்கள் வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கே கல்வியறிவை வழங்கினார்கள். ஆனால், நாம் அதிலிருந்து பல படிகள் முன்னேறி, இன்று தரமான கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறோம். இதுபோன்ற வினாடி -வினா நிகழ்ச்சிகளின் மூலம், மாணவர்களின் கல்வித் தகுதி பன்மடங்கு உயரும்.” என்றார்.
இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று, முதலிடத்தை, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களான பா. பாரதியும், பெ. விஜயகணபதியும் பெற்றனர். இவர்கள் தான் புதுச்சேரி பதிப்பில் இருந்து அமெரிக்கா செல்லவிருக்கும் வெற்றியாளர்கள். இரண்டாமிடத்தைப் பெற்று, தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினியைத் தட்டிச் சென்றவர்கள், தூய இருதய ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஞா. நவீன் ராஜ் மற்றும் ஜெ.பி. லலித் ஆதித்யா. தலா 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வென்றவர்கள், மூன்றாம் பரிசு பெற்ற ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களான வெ.குமுதாவும் பூ. ஐஸ்வர்யாவும்.மேலும் இவர்களுக்கு கைக்கடிகாரங்கள், வேட்டிகள், வெள்ளிநாணயங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
“நான் தொடர்ச்சியா பட்டம் படிப்பேன். உண்மையிலேயே இதையெல்லாம் தமிழில் படிக்கும்போது, ரொம்ப எளிமையாகப் புரிஞ்சுது. ஞாபகமும் இருந்தது. எவ்வளவு விஷயங்கள், சப்ஜெக்டுகள்...அப்பப்பா. அதெல்லாம் தான் இன்னிக்கு முதல் பரிசு பெற உதவின.” என்று தெரிவித்தார் முதல் பரிசுபெற்ற மாணவர்களில் ஒருவரான பெ. விஜயகணபதி.
இரண்டாம் பரிசுபெற்ற மாணவர்களில் ஒருவரான லலித் ஆதித்யா பேசும்போது, “நான் முதல் பரிசுக்குத்தான் முயற்சி செஞ்சேன். பட்டம் இதழை இன்னும் நல்லா படிப்பேன். அடுத்த முறை முதல் பரிசு வாங்கி, அமெரிக்கா போயே தீருவேன்.” என்றார்.
முன்னதாக, மாணவர்களை ஊக்கப்படுத்தி, பட்டம் இதழை வாசிக்க வைக்கும் பள்ளிகளைக் கெளரவிக்கும் விதமாக, பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் பட்டம் சார்பாக புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கி. வெங்கட்ராமன் தங்கத் தாமரை விருதுகளை வழங்கினார். “ஆங்கிலத்தில் தான், எந்தச் சமரசமும் இல்லாத தரமான குவிஸ் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். முதன்முறையாக தமிழ் மொழியில் இவ்வளவு தரமான போட்டியை இன்றுதான் பார்க்கிறேன். அறிவுத்தேடல் உள்ளவர்களைத் தேடித்தேடி நீங்கள் கண்டுபிடிக்கும் விதமும், வாய்ப்புக் கொடுத்து கெளரவிக்கும் விதமும், மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.
அடுத்த ஆண்டு, எங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு இன்னும் நன்கு பயிற்சி அளித்து இந்தப் போட்டிக்கு அழைத்து வருவோம்,” என்று பல ஆசிரியப் பெருமக்கள் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது, “அடுத்த குவிஸ் போட்டி எப்போ சார்?” என்று பல மாணவர்கள் குதூகலத்தோடு கேட்டது கண்முன்னேயே நிற்கிறது.
- ஆர்.வெங்கடேஷ்

