தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நனவானது தூய்மைக் கனவு!

நனவானது தூய்மைக் கனவு!

நனவானது தூய்மைக் கனவு!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனம்: சுகாதாரம்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பினார் காந்தி. அவர் கலந்துகொண்ட கூட்டங்களில், ''ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தத்தைத் கடைப்பிடித்தால் கிராமம் சுத்தமாக இருக்கும். தன்னளவில் சுத்தமாக இருப்பது என்பது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது. திறந்தவெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. வீட்டின் கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது. சுகாதராமற்று இருப்பதுதான் பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது'' என்று பேசினார்.

பேசியதோடு அல்லாமல், “சுகாதாரம் மற்றும் உடல்நலத்தில் பொதுஅறிவு” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதினார். பள்ளியிலேயே மாணவர்களுக்குச் சுகாதாரம் பற்றி, விழிப்புணர்வைப் போதிக்க வேண்டும் என்றார் காந்தி. சுகாதாரச் சீர்கேடு இந்தச் சமூகத்தையே பாதிக்கும் என்றார்.

'அரசியலில் தன்னாட்சி பெறுவதைவிட சுகாதாரத் தன்னிறைவு' தான் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். கிராமப்புற சுகாதாரம் மட்டுமல்லாமல், நகர்ப்புற சுகாதாரம் குறித்தும் பேசினார்.

1915ஆம் ஆண்டு ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற்றது. அதில் காந்தியடிகள் கலந்துகொண்டார். அங்கே வந்த மக்கள், பாவத்தைப் போக்குவதாக நினைத்துக்கொண்டு தாங்கள் உடுத்தியிருந்த பழைய உடைகளை அங்கேயே விட்டுச் சென்றனர்.

மலைபோல குவிந்துகிடந்த உடைகளைக் கண்டு கவலைப்பட்டார் காந்தி. “மதத்தின் பெயரால் சுகாதார விதிமுறைகளை மீறி, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துகிறார்கள்” என வேதனைப்பட்டார்.

''சாதாரண மக்களின் வீடுகளும் சுகாதாரம் பேணும்பொழுது, நான் மிகவும் மனத் திருப்தி அடைவேன்'' என்றார் காந்தி. ''நாம் ஒவ்வொருவரும் துப்புரவுப் பணியாளர்களாக மாறி, இந்தியாவைத் தூய்மை நாடாக மாற்ற வேண்டும்'' என்ற காந்தியின் கனவுதான், இப்போது 'தூய்மை இந்தியா' திட்டமாக உருவெடுத்திருக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமே சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது என்பதே. இத்திட்டத்தைச் செயற்படுத்தும் நோக்கமே, தூய்மைத் திட்டத் தூதுவர்களை நியமித்து, கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

இதையேதான் அன்று காந்தியடிகள் ''கிராமப்புறங்களில் தன்னார்வலர்களை உருவாக்கி, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்'' என்று கூறினார். இரண்டையும் உற்று நோக்கும்போது, திட்டத்தின் பெயர் வெவ்வேறாக இருந்தாலும், நோக்கம், திட்டச் செயற்பாடு எல்லாம் ஒன்றுதான்.

காந்தியடிகள் 'முழு சுகாதார கிராமம்' என்றார். இன்று கொஞ்சம் விரிவாக 'தூய்மை இந்தியா' என்ற பெயரில் அதை செயற்படுத்துகிறது அரசு.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி, 'தூய்மை இந்தியா திட்ட'த்தை அறிமுகம் செய்துவைத்தபோது, “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே, மகாத்மா காந்திக்கு, அவரது 150வது பிறந்த நாளில், நாம் அவருக்குச் செலுத்தும் நெஞ்சார்ந்த அஞ்சலி”யாக இருக்கும் என்றார்.

மா. செல்லமுத்து,

மதுரை காந்தி கிராம பல்கலைக்கழகம்.

பேட்டி: த.சங்கர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us