PUBLISHED ON : டிச 24, 2018

கடந்த 30 ஆண்டுகளாக எந்தத் திருத்தமும் செய்யப்படாமல் இருந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. அதற்கான மசோதாவை நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் நிறுவனங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நேரடி விற்பனை, மின்னணு விற்பனை போன்றவற்றை வரையறை செய்யும் பிரிவுகளும் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இம்மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர், “இது வருங்காலத்தை மனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 10- முதல் 20 ஆண்டுகளுக்கான நுகர்வோரின் சட்டப் பாதுகாப்புத் தேவைகளை இச்சட்டம் வழங்கும்” என்று தெரிவித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது.
