PUBLISHED ON : டிச 17, 2018

ஒரே மாதத்தில், 22 மொழிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 'பாஷா சங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், மாணவர்களிடையே கலாசார ஒருங்கிணைப்பை நிகழ்த்துவதற்காக முன்னெடுக்கப்படுகிறது. ஒரே பாரதம், சிறந்த பாரதம் (ஏக் பாரத், ஸ்ரேஷ்டா பாரத் - Ek Bharat Shreshtha Bharat) என்னும் முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இவ்வியக்கம், அரசுப் பள்ளிகளில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 21 வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது, இளைய சமுதாயத்தினரிடையே கலாசார ஒற்றுமையை ஏற்படுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று இத்திட்டத்தை முன்னெடுக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
இதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பள்ளிகளிலும் தினமும் ஒரு மொழி கற்பிக்கப்படும். தினமும் ஒரு மொழியில் இருந்து குறைந்தது 5 வரிகளை மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் காலை வணக்கத்திற்கு கூடுமிடத்தில், ஆசிரியர்கள் அதிகம் பயன்படக்கூடிய வரிகளைச் சொல்லிக்கொடுத்து, மாணவர்களைத் திரும்பச்சொல்ல வைக்கவேண்டும். தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
“வணக்கம், உங்கள் பெயர் என்ன?, எப்படி இருக்கிறீர்கள்? என்பன போன்ற பொதுவான 5 சொற்றொடர்களை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அல்லது அம்மொழி தெரிந்த மாணவர்கள் முன்னே வந்து மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.” என்கிறார் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்.
பள்ளியில் கற்பிக்கும்போது, அதை வீடியோ பதிவுசெய்து, அரசின் வலைத்தளத்திலும் யூடியூப்பிலும் ஏற்றி ஒளிபரப்புகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்கான பிரத்தியேக http://mhrd.gov.in/bhashasangam/ வலைத்தளம் மூலம் அன்றைக்கான மொழி மற்றும் தொடர்களை பெற்றுக்கொள்ளலாம். என்றேனும் ஒரு நாளுக்கான மொழிப் பாடத்தைத் தவறவிட்டு விட்டால், மாதக் கடைசியில் அம்மொழிச் சொற்றொடர்களைச் சொல்லித் தந்து, திட்டத்தை நிறைவுசெய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு.
