
நாடு பிடிக்கும் விளையாட்டுக்கு, ஆயுதங்கள் எல்லாம் தேவை இல்லை. நான்கு பேரும், விளையாட ஒரு மைதானமும், சுமார் ஒரு அடி உயரமுள்ள குச்சியும் இருந்தால் போதும்.
1. மைதானத்தின் நடுவில் சம அளவிலான நான்கு பெரிய கட்டங்களை வரைந்து கொள்ளவும். ஒவ்வொரு கட்டமும் 5 அல்லது 6 அடி நீள அகலம் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. ஒவ்வொருவருக்கும், தலா ஒரு கட்டம்; அதுதான் அவர்களின் நாடு. தங்களுக்குப் பிடித்தமான நாட்டின் பெயரைச் சூட்டிக் கொள்ளவும்.
3. நான்கு பேரும் தங்களின் நாட்டுக்குள் நிற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு காலாவது நாட்டுக்குள் இருக்க வேண்டும்.
4. நான்கு பேரில் ஒருவரிடம் குச்சி இருக்கும். முதலில் யாரிடம் குச்சி இருக்க வேண்டும் என்பதை சா, பூ, த்ரீ போட்டு தேர்வு செய்து கொள்ளலாம்.
5. கையில் குச்சி வைத்திருப்பவர், ரெடி, 1,2,3, கோ என்று சொல்லிவிட்டு, ஏதேனும் ஒரு நாட்டுக்குள் குச்சியை வீசி விட்டு ஓடி விட வேண்டும்.
6. குச்சி சரியாக ஒருவரின் நாட்டுக்குள்தான் விழ வேண்டும். இரு நாடுகளின் எல்லையிலோ, கட்டத்துக்கு வெளியிலோ விழுந்துவிடக் கூடாது. அப்படி விழுந்தால் மறுபடி வீச வேண்டும்.
7. குச்சியை வீசும்போதே, மற்றவர்களும் ஓடிவிடலாம். யாருடைய நாட்டுக்குள் குச்சி விழுகிறதோ, அவர்கள் அந்தக் குச்சியைக் கையில் எடுத்து, ஸ்டாப் சொல்ல வேண்டும்.
8. அதுவரை மற்றவர்கள் ஓடிக் கொண்டிருக்கலாம். ஸ்டாப் சொன்னதும், நின்று விட வேண்டும்.
9. மறைவான பகுதிக்கு ஓடக் கூடாது. திறந்தவெளியில்தான் ஓட வேண்டும்.
10. கையில் குச்சியை எடுத்தவர், மற்ற மூன்று நாட்டுக்காரர்களில் யாரை தன்னிடம் உள்ள குச்சியால் வீசி அடிக்க முடிகிறது என பார்க்க வேண்டும்.
11. அடிப்பது என்றால், வேகமாக அடிப்பது அல்ல; குச்சி அவர் மீது படும்படி வீச வேண்டும், அவ்வளவுதான்.
12. அப்படி வீசப்பட்ட குச்சி, வேறு நாட்டுக்காரர் மீது பட்டுவிட்டால், வீசியவர் ஜெயித்துவிட்டார் என்று அர்த்தம். குச்சி படாவிட்டால், அந்த நாட்டுக்காரர் ஜெயித்துவிட்டார்.
13. ஜெயித்தவர், தோற்ற நாட்டுக்காரரின் எல்லையைப் பிடிக்கலாம். அதாவது, தன் நாட்டுக்குள் இருந்தபடி, அந்தக் குச்சியால், தோற்ற நாட்டுக்காரரின் நாட்டுக்குள் எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் கோடுவரைந்து கொள்ளலாம்.
14. அப்படி நாடு பிடிக்கும்போது, வரைபவர் ஒருமுறை வைத்த காலை நகர்த்தக் கூடாது. வரைவதற்கு முன்பே கால்களை அகட்டி வைத்துக் கொள்ளலாம்.
15. வரையப்படும் கோடானது, எல்லைக் கோட்டை இணைப்பதாக இருக்க வேண்டும். தங்களின் எல்லையை பெரிதுபடுத்தும் வகையில் புதிய எல்லைக்கோடு வரைய வேண்டும்.
16. கோடு வரையும்போது, கை, குச்சியை எடுத்துவிடக் கூடாது. ஒரே முறையில் வரைய வேண்டும். குச்சியை தவற விடக் கூடாது. கோடு முழுமைபெற வேண்டும்; பாதியில் நின்று விடக் கூடாது. கையை நிலத்தில் ஊன்றக் கூடாது.
17. நாடு பிடிப்பவர், எல்லையைப் பெரிதுபடுத்தும்போது தவறு செய்துவிட்டால், அந்த வாய்ப்பு முடிந்துவிட்டது.
18. அடுத்து, தோற்றவரிடம் குச்சி தரப்படும். அவர் ரெடி, 1,2,3, 'கோ' சொல்லி, குச்சியை ஏதேனும் ஒரு நாட்டில் போட்டு விட்டு ஓடலாம். இப்படியே விளையாட்டைத் தொடரலாம்.
19. தனது நாட்டின் பகுதியை, மற்றவர்களிடம் முழுமையாக இழந்தவர், ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறைந்தபட்சம் குச்சி விழும் அளவுக்காவது, நாட்டின் பரப்பு இருந்தால்தான் விளையாட முடியும். கடைசியாக பெரிய நாட்டை யார் வைத்திருக்கிறார்களோ அவரே வென்றவர்.

